காரிமங்கலம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்கு
- காரிமங்கலம் அருகேயுள்ள கோவிலுர் ஊர்கவுண்டர் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி.
- சிறுமியை மீட்டு காரிமங்கலத்தில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் சமூக நலத்துறை அதிகாரி சாந்தி என்பவருக்கு காரிமங்கலம் ஊர்கவுண்டர் கொட்டாய் என்ற இடத்தில் சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி அங்கு விசாரணை மேற்கொண்ட பெண் அதிகாரி சம்பவம் உறுதியானதை அடுத்து அது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார்.
அதன் பேரில் காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுமியை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அதில், காரிமங்கலம் அருகேயுள்ள கோவிலுர் ஊர்கவுண்டர் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருக்கும் தருமபுரி மாவட்டம் செட்டிக்கரை மாதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் பிரகாஷ் (வயது 27) என்பவருக்கும் பண்ணத்தூர் தேவிர அள்ளி முருகன் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றதும் தெரிய வந்தது.
இதனையடுத்து மகளிர் சமூக நல அலுவலர் அளித்த புகாரின் பேரில் சிறுமியை திருமணம் செய்த மாதுப்பட்டியை சேர்ந்த ராஜா மகன் பிரகாஷ் சிறுமியின் தந்தை, சிறுமியின் தாய் மற்றும் மாதுப்பட்டியை சேர்ந்த ராஜா, நஞ்சம்மாள் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து சிறுமியை மீட்டு காரிமங்கலத்தில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.