சி.எஸ்.ஐ. டயோசீசன் மோதல் விவகாரம்- தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் முன்ஜாமீன் மனு தாக்கல்
- ஞானதிரவியம் எம்.பி., லே செயலாளர் ஜெயசிங் உட்பட 32 பேரும் முன்ஜாமீன் கோரி நெல்லை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
- முன்ஜாமீன் மனு விசாரணை 30-ந்தேதி எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி சீனிவாசன் அறிவித்துள்ளார்.
நெல்லை:
நெல்லை சி.எஸ்.ஐ. திருச்சபையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பணி நியமனம், தாளாளர் மாற்றம் உள்ளிட்ட விவகாரங்களால் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.
இதனால் திருச்சபையில் பேராயர் பர்னபாஸ் தலைமையிலும், லே செயலாளர் ஜெயசிங் தலைமையிலும் நிர்வாகிகள் 2 அணியினராக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் ஒரு தரப்பினர் பாளை ஐகிரவுண்டு செல்லும் சாலையில் அமைந்துள்ள டயோசீசன் அலுவலகத்தில் சில அறைகளை பூட்டி சாவியை எடுத்து சென்று விட்டனர்.
இதனால் பணிகள் முடங்கி கிடப்பதாகவும், அதனை உடனடியாக திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்காக பாளை இட்டேரியை சேர்ந்த மதபோதகர் காட்பிரே நோபுள் டயோசீசன் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கினர். இதுதொடர்பாக அவர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் அளித்தார்.
அதன்பேரில் இரவு திருச்சபையில் குழப்பம் விளைவிப்பதாக கூறி நெல்லை தொகுதி தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம், லே செயலாளர் ஜெயசிங், பொருளாளர் மனோகர், வக்கீல் ஜான் உள்பட 13 பேர் மற்றும் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய 20 பேர் என மொத்தம் 33 பேர் மீது பாளை போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஜான் கைது செய்யப்பட்டார். மேலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஞானதிரவியம் எம்.பி., லே செயலாளர் ஜெயசிங் உட்பட 32 பேரும் முன்ஜாமீன் கோரி நேற்று நெல்லை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த முன்ஜாமீன் மனு விசாரணை 30-ந்தேதி எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி சீனிவாசன் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, பிஷப் பர்னபாஸ் உத்தரவின்பேரில் ஜான்ஸ் பள்ளி தாளாளராக இருந்த ஞானதிரவியம் எம்.பி. கடந்த வாரம் நீக்கப்பட்டு, வக்கீல் அருள்மாணிக்கம் புதிய தாளாளராக நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்க சென்றபோது அங்குள்ள அலுவலகத்திற்குள் புகுந்து ஞானதிரவியம் எம்.பி. மற்றும் அவரது ஆதரவாளர்கள் தகராறில் ஈடுபட்டதாக அருள்மாணிக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அந்த மனுவில், என்னை ஞானதிரவியம் எம்.பி., வக்கீல் ஜான், லே செயலாளர் ஜெயசிங் மற்றும் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய 10 பேர் ஜான்ஸ் பள்ளி அலுவலகத்திற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் எனது அலுவலகத்தில் இருந்த பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவேடு, பணம் வரவு-செலவு புத்தகம் ஆகியவற்றை திருடிச்சென்றுவிட்டனர். எனவே அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த புகார் மனுவை ஏற்றுக்கொண்ட போலீசார், மனு ரசீது வழங்கினர். தொடர்ந்து ஞானதிரவியம் எம்.பி., அவரது ஆதரவாளர்கள் மீது புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று காலை டயோசீசன் அலுவலகத்தில் பூட்டிக்கிடக்கும் அறைகளை திறக்குமாறு பேராயர் பர்னபாஸ் உத்தரவிட்டுள்ளார். இதனால் எதிர்தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க அங்கு வரலாம் என்று கூறப்படுகிறது. எனவே அங்கு முன்எச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.