திருப்பூரில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி
- திருப்பூர் குமரன் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
- விபத்து காரணமாக இன்று காலை குமரன் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் காங்கயம் ரோடு மிசின் வீதியை சேர்ந்தவர் முகமது இசாக். இவரது மனைவி ரபியதுல் பகிரியா. இவர்கள் இன்று காலை திருப்பூர் குமரன் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் பழைய பஸ் நிலையம் நோக்கி அரசு டவுன் பஸ் வந்தது. இந்தநிலையில் எதிர்பாராதவிதமாக பஸ் மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டில் உரசியது. இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து முகமது இசாக், ரபியதுல் பகிரியா ஆகியோர் கீழே விழுந்தனர். அப்போது ரபியதுல் பகிரியா மீது பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே கணவன் கண்முன்னே பலியானார். முகமது இசாக் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
உடனே இது குறித்த தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த முகமது இசாக்கை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ரபியதுல் பகிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து பஸ் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் குமரன் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். விபத்து காரணமாக இன்று காலை குமரன் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருப்பூர் மாநகர் பகுதியில் காலை,மாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு இடையே பயணிக்க வேண்டியுள்ளது. இதில் சிலர் விபத்துக்களில் சிக்குகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை தீர்க்கவும், விபத்துக்களை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.