கும்பகோணம் வாலிபரிடம் ரூ.1.21 கோடி மோசடி செய்த இளம்பெண் மீது வழக்கு- நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு
- வங்கி மூலமாகவும், நேரடியாகவும் பணம் மற்றும் தங்க நகைகள் என ரூ.1 கோடியே 21 லட்சம் கொடுத்திருந்தேன்.
- என்னிடம் மோசடி செய்த பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.
மதுரை:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த பஷீர் அகமது என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் பக்ரைன் நாட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தேன். அங்கு அருகில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றிய கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த வினி என்ற ஏஞ்சல் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
அந்தப் பெண் கேரளாவில் பியூட்டி பார்லர் தொழில் தொடங்க உள்ளதாகவும், அதில் அதிக வருமானம் வரும் என்றும், எனவே அதில் என்னை முதலீடு செய்ய சொன்னார். அதனை நம்பி நான் வங்கி மூலமாகவும், நேரடியாகவும் பணம் மற்றும் தங்க நகைகள் என ரூ.1 கோடியே 21 லட்சம் கொடுத்திருந்தேன்.
தொழிலில் வரும் லாபத்தை எனக்கு தருவதாக உறுதியளித்திருந்தார். நான் வழங்கிய பணம் மற்றும் அதற்கான லாபம் குறித்து அந்த பெண்ணிடம் பல முறை கேட்டும் தராமல் இழுத்தடித்து வந்தார். கடந்த மாதம் அவரை நேரில் சந்திக்க அவரது சொந்த ஊரான கேரளா மாநிலம் கொல்லம் பகுதிக்கு சென்றேன்.
அப்போது அவர் அங்கு இல்லை. மேலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது அந்த பெண் என்னைப் போன்று பல பேரிடம் தொழில் தொடங்குவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக உள்ளார் என தெரியவந்தது.
இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்திருந்தேன். ஆனால் இதுவரை நடவடிக்கைகள் இல்லை. எனவே என்னிடம் மோசடி செய்த பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். எனது பணத்தையும் மீட்டுத்தர வேண்டுமென புகார் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி, பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை செய்து இரண்டு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்தார்.