திருவள்ளூர் அருகே கிராமத்தில் கட்டிய தீண்டாமை சுவர் இடிப்பு
- கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திரா மாநில எல்லையோரத்தில் தோக்கமூர் கிராமம் உள்ளது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திரா மாநில எல்லையோரத்தில் தோக்கமூர் கிராமம் உள்ளது. இங்கு பட்டியலினத்தைச் சேர்ந்த 100 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
தோக்கமூர், எளார்மேடு, எடகண்டிகை ஆகிய 3 கிராமமக்களுக்கும் பொதுவானதாக அப்பகுதியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலும் கோவிலுக்கு சொந்தமான 2.94 ஏக்கர் அரசு நிலமும் உள்ளது.
பட்டியலின மக்கள் தங்கள் கால்நடைகளை மேய்க்கவும், வி.ஏ.ஓ அலுவலகம், அங்கன்வாடி மையம், அரசு பள்ளி மற்றும் நியாய விலை கடை உள்பட பல்வேறு தேவைகளுக்கு இந்த இடத்தை நடை பாதையாக பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு பட்டியலின மக்கள் அந்த நிலத்தை பயன்படுத்த முடியாத வகையில் சுற்றிலும் 8 அடி உயரம் மற்றும் 90 மீட்டர் நீளத்தில் தீண்டாமை சுற்றுசுவர் கட்டப்பட்டது. மேலும் மீதமுள்ள இடத்தில் முள்வேலியை அமைத்தனர்.
இதற்கு பட்டியலின மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் இதற்கு மறுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இந்த நிலையில் தீண்டாமை சுவரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும் விடுதலை சிறுத்தை கட்சி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னணி என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகங்களில் பல கட்ட அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் தோக்கமூர் கிராமத்தில் கட்டப்பட்ட தீண்டாமை சுவரை அகற்ற திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று காலையில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கண்ணன் தலைமையில் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் 5 ஜே.சி.பி. எந்திரங்கள் உதவியுடன் தீண்டாமை சுவரை இடித்து அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அசம்பாவிதத்தை தடுக்க டி.எஸ்.பி.க்கள் கிரியாசக்தி, சாரதி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
நிலத்தை சுற்றி இருந்த முள்வேலி அகற்றப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த பொது மக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது முள்வேலியை அகற்றுவதற்கு முறையாக மனு அளிக்குமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அங்கு கட்டப்பட்டு இருந்த தீண்டாமை சுவர் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முள்வேலியையும் உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.