சென்னிமலை பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை- வீடுகள் மீது முறிந்து விழுந்த மின்கம்பங்கள்
- சென்னிமலை டவுன் 9-வது வார்டு பகுதியில் மூன்று மின் கம்பங்கள் அடுத்தடுத்து முறிந்து வீடுகளின் மேல் விழுந்தது.
- திடீர் மழை காரணமாக சென்னிமலை பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் கடந்து சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்தது. அக்னி நட்சத்திர வெயில் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் சென்னிமலை பகுதியில் நேற்று வெயிலின் தாக்கம் மாலையில் குறைந்து வானில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. பின்னர் மாலை 6 மணி அளவில் திடீர் என பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்ட தொடங்கியது. மழை ஒரு மணி நேரம் நீடித்தது.
பலத்த சூறைக்காற்றால் சென்னிமலை-அரச்சலூர் ரோடு காளிக்காவலசு பிரிவில் வேப்பமரம் முறிந்து விழுந்தது. சென்னிலை மலை அடிவாரப்பகுதி மற்றும் சென்னிமலை-ஈங்கூர் ரோடு பகுதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்தது.
சென்னிமலை டவுன் 9-வது வார்டு பகுதியில் மூன்று மின் கம்பங்கள் அடுத்தடுத்து முறிந்து வீடுகளின் மேல் விழுந்தது. இதில் வீடுகளும் சேதமடைந்தது. உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு விரைந்து தகவல் கொடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
இதனால் 9-வது வார்டு பகுதி மற்றும் சென்னிமலை மீதுள்ள முருகன் கோவிலிலும் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது.
இன்று காலை முதல் மின் கம்பங்களை அகற்றி புது மின் கம்பங்கள் அமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த திடீர் மழை காரணமாக சென்னிமலை பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.