உள்ளூர் செய்திகள் (District)
அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

அம்பை அரசு மருத்துவமனையில் நுழைவு சீட்டு பெற லஞ்சம்? வீடியோ வைரல்- இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-01-22 08:21 GMT   |   Update On 2023-01-22 08:21 GMT
  • அரசு ஆஸ்பத்திரியில் லஞ்ச புகார் எழுந்ததையடுத்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட செயலாளர் தலைமையில் திடீரென அம்பை அரசு மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • தகவலறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கல்லிடைக்குறிச்சி:

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அம்பை மட்டுமின்றி, கல்லிடைக்குறிச்சி, பாபநாசம், முக்கூடல் மற்றும் கடையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

அவ்வாறு சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் நுழைவு சீட்டுக்கு லஞ்சம் வசூலிப்பதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அம்பை அரசு மருத்துவமனைக்கு சென்ற சமூக ஆர்வலர்கள், நுழைவு சீட்டு வழங்கிய ஊழியரிடம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக கேட்டனர்.

அப்போது சிறுவனிடம் ரூ.100 இல்லை என்றதால் திருப்பி அனுப்பி உள்ளீர்கள். இந்த பணத்தை யார் உங்களிடம் வாங்க சொன்னார் என்று கேட்டனர். அதற்கு அந்த பெண் ஊழியர் இனிமேல் நான் காசு வாங்கமாட்டேன். மன்னித்து விடுங்கள் என்றார். இதனை அங்கு நின்று கொண்டிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். தற்போது அவை வைரலாகி வருகின்றன.

இதற்கிடையே அரசு ஆஸ்பத்திரியில் லஞ்ச புகார் எழுந்ததையடுத்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட செயலாளர் பூக்கடை கண்ணன் தலைமையில் திடீரென அம்பை அரசு மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

இதுபற்றி அவர்கள் கூறுகையில், நுழைவு சீட்டு மட்டுமல்லாமல் இங்கு பிரசவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்காக சிகிச்சை பெற வருபவர்களிடம் ரூ.100 முதல் ரூ.1,500 வரை லஞ்சம் வாங்கப்படுகிறது.

வசதி இல்லாதவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெற முடியாமல் தான் அரசு மருத்துவமனையை நாடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இதற்கு தீர்வு காண வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News