ஒகேனக்கல்லில் நீர்வரத்து 6500 கனஅடியாக அதிகரிப்பு
- தமிழக-கர்நாடகா எல்லையான பிலிக்குண்டுலு பகுதியில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.
- ஐந்தருவி, சினிபால்ஸ், மெயினருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
ஒகேனக்கல்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் கடந்த 4 நாட்களாக வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக நீடித்து வந்தது.
இதனை தொடர்ந்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 தினங்களாக மீண்டும் மழை பெய்ததால், தமிழக-கர்நாடகா எல்லையான பிலிக்குண்டுலு பகுதியில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இதனால் ஒகேனக்கல்லில் இன்று காலை நீர்வரத்து சற்று அதிகரித்து வினாடிக்கு 6500 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
இந்த நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினிபால்ஸ், மெயினருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக பிலிக்குண்டுலு பகுதியில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.