குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பெண் பாலியல் பலாத்காரம்- ஓட்டல் ஊழியர் கைது
- சப்-இன்ஸ்பெக்டர் ராதா உள்பட 5 போலீசார் அடங்கிய குழு அங்குள்ள ஒரு விடுதியில் பதுங்கி இருந்த சுரேசை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
- போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் பணத் தேவைக்காக இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.
அம்பத்தூர்:
செங்குன்றம் அடுத்த சோழவரம் பகுதியை சேர்ந்தவர் டெய்சி(42).
இவர் அப்பகுதியில் உள்ள மகளிர் குழுக்களுக்கு கடன் வாங்கித் தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கணவனை இழந்த டெய்சி அருகில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
அதே ஓட்டலில் வேலை செய்த நபரின் மூலம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த ஓட்டல் ஊழியர் சுரேஷ் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
அவரும் அந்த குழுவில் இணைந்ததால் டெய்சி அவருக்கு கடன் கொடுத்து உள்ளார். சில தவணைகளை கட்டிய அவர் மீதமுள்ள தவணையை செலுத்தாமல் இருந்துள்ளார்.
இதனையடுத்து அவரிடம் தவணையை கட்டுமாறு பல முறை டெய்சி கூறியுள்ளார். இந்நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு சுரேஷ் மொத்த தவணையையும் கட்டுவதாகவும் சோழவரம் பெரியார் நகரில் தான் தங்கியுள்ள அறைக்கு வந்து வாங்கி கொள்ளுமாறும் அழைத்துள்ளார்.
இதனை நம்பி அங்கு வந்த டெய்சிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை அவரின் செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார்.
பின்னர் அதனை காட்டி பலமுறை டெய்சியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் அடிக்கடி பணம் கேட்டும் மிரட்டியுள்ளார்.
இதற்கு டெய்சி மறுக்கவே அந்த வீடியோவை டெய்சியின் மகனுக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து டெய்சி கடந்த 5-ந்தேதி அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி லட்சுமி, தலைமறைவான சுரேசை தேடிவந்தார். நேற்று காலை செல்போன் டவர் மூலம் அவர் ரெட்டேரி பகுதியில் பதுங்கி இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் ராதா உள்பட 5 போலீசார் அடங்கிய குழு அங்குள்ள ஒரு விடுதியில் பதுங்கி இருந்த சுரேசை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் அவர் பணத் தேவைக்காக இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.
மேலும் அவர் வீடியோ எடுத்த செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.