கரூரில் இன்று மீண்டும் பரபரப்பு- அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை
- மெஸ் கார்த்தியின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மூலனூர் ஆகும்.
- மெஸ் கார்த்தி தொழில் காரணமாக கரூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கரூர்:
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் மற்றும் தொடர்புடையவர்கள் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த மாதம் 26-ந்தேதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையை தொடங்கினர்.
தொடர்ந்து 8 நாட்கள் நடந்த இந்த சோதனை கடந்த 3-ந்தேதி நிறைவடைந்தது. முன்னதாக தொடக்க நாளில் சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை பெண் அதிகாரி உள்ளிட்டவர்கள் முற்றுகையிடப்பட்டு, காரும் உடைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து உள்ளூர் போலீசாரை தவிர்த்து மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் சோதனை நடத்தப்பட்ட து. இதில் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்பட்டது. இதையடுத்து அடுத்தகட்டமாக கரூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடு, சகோதரர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அமைச்சரின் சகோதரர் டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி நிறுவன அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். தங்களது அனுமதியில்லாமல் திறக்க கூடாது என்றும், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அங்கு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அப்போது அவர் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது. இதற்கிடையே அவரது தம்பிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.
இந்த பரபரப்புகள் அடங்குவதற்குள் கரூரில் இன்று மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கரூர் ஈரோடு சாலையில் சக்தி மெஸ் நடத்தி வரும் பங்குதாரர்கள் ரமேஷ், மெஸ் கார்த்திக். இவர்களது வீடு ஈரோடு ரோடு கோதை நகர் அன்னை அப்பார்ட்மெண்ட்டில் உள்ளது. இங்கு இன்று 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் இந்த சோதனை நடந்து வருகிறது. கடந்த மாதம் நடந்த வருமான வரித்துறையினர் சோதனையின்போது இவர்களது மெஸ்சிலும், வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது வீடுகளின் இரண்டு அறைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து சென்றனர்.
இப்போது அந்த வீடுகளில் சீலை அகற்றி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் மெஸ் கார்த்தி தி.மு.க.வில் மாநில விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் துணைச் செயலாளர் பொறுப்பில் உள்ளதாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.
மெஸ் கார்த்தியின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மூலனூர் ஆகும். இவர் தொழில் காரணமாக கரூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கரூரில் மீண்டும், மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி தொடர்புடையவர்கள் வீடுகளில் சோதனை நடத்தி வருவது தி.மு.க.வினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.