உள்ளூர் செய்திகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. தலைமையில் சமாதான கூட்டம்

Published On 2023-01-13 09:32 GMT   |   Update On 2023-01-13 09:32 GMT
  • மதுரை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக இன்று காலை மேலூர் ஆர்.டி.ஓ. பிர்தவுஸ் பாத்திமா தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது.
  • அவனியாபுரம் அனைத்து சமுதாய பொதுமக்கள் கமிட்டி சார்பில் முருகன், அன்பரசன், கல்யாண சுந்தரம், முனியசாமி, தென்கால் விவசாய கமிட்டியை சேர்ந்த கண்ணன், ராஜ்குமார், ராம்கி, விஜயபிரகாஷ் உள்பட 62 பேர் கலந்து கொண்டனர்.

மதுரை:

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் நாளை மறுநாள் (15-ந்தேதி) ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இந்த நிலையில் அவனியாபுரம் முனியசாமி, கல்யாண சுந்தரம் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.

அதில் அவனியாபுரத்தில் கடந்த ஆண்டு கோர்ட்டு உத்தரவுப்படி அனைத்து சமூகமும் அடங்கிய பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டது. நடப்பாண்டு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் வைத்து நடத்தும் சூழல் உள்ளது. பட்டியல் சமூகத்தினர் புறக்கணிக்கப்படுகின்றனர்.

கோர்ட்டின் முந்தைய உத்தரவுப்படி அனைத்து சமூகமும் அடங்கிய குழு அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் முன்பு விசார ணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அரசு அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு நடத்துகிறது. அந்தக் குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அனைத்து சமூகமும் அடங்கிய குழு அமைக்க வேண்டியது அவசியமாகும். கலெக்டர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. தலைமையில் அனைத்து சமூக பிரதிநிதிகள் முன்னிலையில் சமாதான கூட்டம் நடத்த வேண்டும்.

இதில் தீர்வு ஏற்படாவிட்டால் ஒருங்கிணைப்பு குழுவில், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரை சேர்த்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அதன்படி மதுரை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக இன்று காலை மேலூர் ஆர்.டி.ஓ. பிர்தவுஸ் பாத்திமா தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. இதில் அவனியாபுரம் அனைத்து சமுதாய பொதுமக்கள் கமிட்டி சார்பில் முருகன், அன்பரசன், கல்யாண சுந்தரம், முனியசாமி, தென்கால் விவசாய கமிட்டியை சேர்ந்த கண்ணன், ராஜ்குமார், ராம்கி, விஜயபிரகாஷ் உள்பட 62 பேர் கலந்து கொண்டனர்.

அவர்களில் 16 பேரை தேர்வு செய்து ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பு குழுவில் சேர்ப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது தென்கால் பாசன விவசாய சங்கத்தினருக்கும், அவனியாபுரம் கிராம கமிட்டி உறுப்பினர்களுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தல் சலசலப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News