உள்ளூர் செய்திகள்
விபத்து நடைபெறுவதற்கு முன்பு நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டதை படத்தில் காணலாம்.

காங்கயம் அருகே கார்-பஸ் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலி

Published On 2022-08-05 06:47 GMT   |   Update On 2022-08-05 06:47 GMT
  • விபத்துக்குள்ளான தனியாா் பேருந்துக்கு பின்னால் வந்த காா் பேருந்து மீது மோதியது.
  • காரில் பயணித்தவா்கள் அதிா்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினா்.

காங்கயம்:

கோவை மாவட்டம், சூலூா் பகுதியைச் சோ்ந்த வீரக்குமாா் உள்ளிட்ட 6 போ் திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் இருந்து அவிநாசிபாளையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனா். தாராபுரத்தில் இருந்து குண்டடம் வழியாக பல்லடம் செல்லும் சாலையில் தற்போது சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், காரில் வந்தவா்கள் அவிநாசிபாளையம் நோக்கி சென்றுள்ளனா்.

இந்நிலையில் திருப்பூரில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பழனி நோக்கி பயணிகளுடன் தனியாா் பேருந்து வந்தது. கொடுவாய்-சக்திவிநாயகபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவிநாசிபாளையம் நோக்கி சென்ற காா் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை தாண்டி எதிரே வந்த தனியாா் பேருந்து மீது மோதியது.

இதில் காரின் முன்பகுதி முற்றிலும் உருக்குலைந்தது. மேலும் பேருந்தின் முன்சக்கரம் தனியாக கழன்றது. இதில் காரில் பயணித்த வீரக்குமாா் (31), முருகேசன் (32), சஜீத் (33), வெற்றிச்செல்வன் (38) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், படுகாயமடைந்த மகேஷ்குமாா் (34), கிஷோா்குமாா் (35) ஆகியோரை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 5 போ் லேசான காயத்துடன் உயிர் தப்பினா். அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும், விபத்துக்குள்ளான தனியாா் பேருந்துக்கு பின்னால் வந்த காா் பேருந்து மீது மோதியது. இதில் காரில் பயணித்தவா்கள் அதிா்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினா்.

விபத்து குறித்து தகவலறிந்த காங்கயம் டி.எஸ்.பி., பாா்த்திபன், காங்கயம் இன்ஸ்பெக்டர் காமராஜ் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். இந்த விபத்து குறித்து ஊதியூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மகேஷ்குமார் இன்று காலை உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. கிஷோர்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News