சிவகங்கை தொகுதியில் எதிர்ப்புகளை கடந்து கரையேற போராடும் கார்த்தி சிதம்பரம்
- கடந்த சில தேர்தல்களாக அங்கு ப. சிதம்பரம் அணியின் கையே ஓங்கி உள்ளது.
- கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் என்பதால் மீண்டும் சர்ச்சை எழுந்தது.
சிவகங்கை:
சிவகங்கை தொகுதியில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியே போட்டியிட்டு வருகிறது. 1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கு தி.மு.க. நேரடியாக போட்டியிடவில்லை. அதன் பிறகு 2014-ல் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் களம் கண்டதில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. ஆனாலும் சிவகங்கை எப்போதும் காங்கிரசின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது.
இங்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் ஆகிய இரு கோஷ்டிகள் உள்ளன. இரு தரப்பினரும் எப்போதும் ஒருவரையொருவர் போட்டி போட்டு கருத்துக்களை தெரிவித்து எதிர் வினையாற்றி வருவது காங்கிரசாரிடையே பெரும் மனக்கசப்பை ஏற்படுத்தி உள்ளது. இருந்தபோதிலும் தேர்தல் என்று வந்து விட்டால் ஒற்றுமை உணர்வுடன் கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவது இயல்பானதாகிவிட்டது.
இந்நிலையில் கடந்த சில தேர்தல்களாக அங்கு ப. சிதம்பரம் அணியின் கையே ஓங்கி உள்ளது. மேலும் கார்த்தி சிதம்பரம் இரண்டு முறை எம்.பி. பதவி வகித்து வருகிறார். அண்மையில் தமிழக காங்கிரசின் மாநில தலைவராக புதிதாக பொறுப்பேற்ற செல்வபெருந்தகை ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் அண்மை காலமாக கார்த்தி சிதம்பரத்தின் பேச்சுகள் கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியிலும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. பிரதமர் மோடி குறித்தும், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குறித்தும் கார்த்தி சிதம்பரம் பேசிய பேச்சுகள் கட்சியினரின் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தின. இது எதிர்கோஷ்டியான சுதர்சனம் நாச்சியப்பன் அணியினருக்கு சாதகமாக அமைந்தது. கார்த்தி சிதம்பரம் பேச்சு குறித்து காங்கிரஸ் மேலிடம் வரையிலும் புகார்கள் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அண்மையில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இரு கோஷ்டியினரும் கடும் வாக்குவாதத்திலும், மோதலிலும் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல் அண்மையில் சிவகங்கை அருகே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த ராஜிவ் பஞ்சாயத்து ராஜ் தேசிய ஒருங்கிணைப்பாளர் இனா முன் ஹசன் பயணம் செய்த காரை கவுன்சிலர் புருஷோத்தமன் உள்ளிட்ட சிலர் மறித்து காரின் சாவியை பறித்துச் சென்றனர். அவர்கள் கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் என்பதால் மீண்டும் சர்ச்சை எழுந்தது.
சுதர்சன நாச்சியப்பன், கே.ஆர்.ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் உள்ளிட்டோர் ஓரணியாக திரண்டு போட்டி கோஷ்டியாக இங்கு செயல்பட்டு வருகின்றனர். இது கார்த்தி சிதம்பரம் தரப்பினருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இரு தரப்பினரும் கடும் போட்டியில் குதித்து தங்களது தரப்புக்கு சீட் வாங்க தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையில் தற்போது சிவகங்கை தொகுதி தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கே ஒதுக்குவது உறுதியாகியுள்ளது. எனவே இங்கு மீண்டும் போட்டியிடுவது குறித்து இரு கோஷ்டிகள் மத்தியிலும் கடும் போட்டி நிலவி வருகிறது. மீண்டும் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவதற்கான வியூகங்களை வகுத்து முன்னாள் மத்திய அமைச்சரும், அவரது தந்தையுமான ப.சிதம்பரம் மேலிடத்தை அணுகி வருகிறார். அவருக்கே மீண்டும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதே வேளையில் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை சம்பாதித்துள்ள கார்த்தி சிதம்பரத்தை மாற்ற வேண்டும் என்ற கருத்தும் மேலோங்கியுள்ளது. எது எப்படி இருந்தாலும் இது போன்ற தொடர்ந்து வரும் களேபரங்களுக்கு மத்தியில் எதிர்ப்பாளர்களை துவம்சம் செய்து சிவகங்கை தொகுதியை தக்க வைப்பதில் கார்த்தி சிதம்பரம் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.
கோஷ்டி பூசல்களை களைந்து ஒருதாய் பிள்ளையாக இருந்து முதலில் வெற்றியை பெற வேண்டும். அதன் பிறகு பூசல்கள், சண்டை, சச்சரவுகளை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பினர் வெள்ளைக்கொடியை பறக்கவிட்டுள்ளனர். எது எப்படி இருந்தாலும் இந்த முறை சிவகங்கை தொகுதியில் வழக்கத்தை விட கூடுதல் அனல் பறக் கும் என்பதில் சந்தேகமில்லை.