கொடைரோடு அருகே சொத்து பிரச்சினையில் கூலித்தொழிலாளி கொலை- சகோதரர் கைது
- சுந்தரேசன் மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி சொத்தில் பங்கு கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார்.
- போலீசார் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைரோடு:
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு மாவுத்தன்பட்டியை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 40) கூலித்தொழிலாளி. கடந்த 25ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு கொடைரோடு சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் மறுநாள் ஏட்டுநாயக்கர் காலனி பகுதியில் உள்ள புளியமரத்தோப்பில் சுந்தரேசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்மைய நாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுந்தரேசன் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் நிலக்கோட்டை டி.எஸ்.பி. முருகன், இன்ஸ்பெக்டர் குருவத்தாய் தலைமையில் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை முடிவில் சுந்தரேசன் தலையில் வெட்டுக்காயம் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுந்தரேசனின் தாய் ராஜாமணி, சகோதரர் முருகன் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் சுந்தரேசன் மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி சொத்தில் பங்கு கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும் அடிக்கடி தாய் மற்றும் வீட்டில் உள்ளவர்களை அடித்து தாக்கியுள்ளார். சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் முருகன் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த சுந்தரேசன் உயிரிழந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.