நில தகராறில் தாயை வெட்டிய மகன் மீது வழக்கு
- அண்ணன்- தம்பி இருவருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- பலத்த காயமடைந்த 3 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
திருத்தணி:
திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பி.டி.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மனைவி கன்னியம்மாள் (வயது 60). இவர்களுக்கு ராணி என்ற மகளும் சிவக்குமார், ரவி என்ற 2 மகன்களும் உள்ளனர். அண்ணன்- தம்பி இருவருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சிவக்குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ரவி வீட்டுக்கு சென்று தாய் கன்னியம்மாவிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது சிவக்குமாருக்கும் ரவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. சிவக்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தம்பி ரவி, தங்கை ராணி, தாய் கன்னியம்மாள் மூவரையும் வெட்டினார்.
இதில் பலத்த காயமடைந்த 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தாய் கன்னியம்மாள் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருத்தணி இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் சிவக்குமார், அவரது மனைவி ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.