மதுரையில் பஸ்சுக்காக காத்திருந்த சென்னை போலீஸ்காரரை கத்தியால் குத்தியவர் கைது
- வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆறுமுகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரர் ராஜ்குமாரை சரமாரியாக குத்தியுள்ளார்.
- ராஜ்குமார் கொடுத்த புகார் பெயரில் அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டி வழக்கு பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தார்.
மதுரை:
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 31). இவர் சென்னை அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். வாரம் ஒருமுறை சொந்த ஊருக்கு அவர் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று மாலை பணி முடிந்து சொந்த ஊர் செல்வதற்காக மதுரை வந்த ராஜ்குமார், இரவில் மதுரை மண்டேலா நகர் சந்திப்பு பகுதியில் காரியாபட்டி பஸ்சுக்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
இதற்கிடையே மதுரை சோளங்குரணி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (39) என்பவர் தனது காரில் மண்டேலா நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு வெளியே வந்தார். அப்போது ஆறுமுகத்திற்கும் பெட்ரோல் பங்க் அருகே பேருந்துக்காக நின்று கொண்டிருந்த காவலர் ராஜ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆறுமுகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரர் ராஜ்குமாரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமாரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ராஜ்குமார் கொடுத்த புகார் பெயரில் அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டி வழக்கு பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தார்.