உள்ளூர் செய்திகள்

சென்னையில் வணிகவரி துறை அதிகாரி என்று மிரட்டி ரூ.10 லட்சம் பறிக்க முயன்றவர் கைது

Published On 2022-07-27 09:26 GMT   |   Update On 2022-07-27 09:26 GMT
  • கொளத்தூர் ஐய்யப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நேரு.
  • போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை:

கொளத்தூர் ஐய்யப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நேரு. இவர் விவசாய பொருட்களை மொத்தமாக விவசாயிகளிடம் இருந்து பெற்று விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இவரது செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து பேசி உள்ளார். விவசாய துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த நபர் நீங்கள் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளீர்கள் என்று கூறி மிரட்டி உள்ளார்.

சைதாப்பேட்டையில் உள்ள வணிகவரி அலுவலகத்துக்கு வருமாறும் அழைத்துள்ளார். இதையடுத்து நேரு தனது நண்பர் சுரேசுடன் சென்றுள்ளார். அப்போது அவர் அருகில் உள்ள கோவிலுக்கு வருமாறு கூறி சந்தித்து பேசி உள்ளார்.

வணிக வரி துறை என்று எழுதப்பட்டிருந்த ஜீப்பில் இருந்தபடியே பேசிய அந்த நபர் வரி ஏய்ப்பு புகாரில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால் ரூ.25 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதற்கு நேரு மறுப்பு தெரிவிக்கவே ரூ.10 லட்சம் பணம் வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக சைதாப்பேட்டை போலீசில் அளிக்கப்பட்ட புகார் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் வியாபாரி நேருவுக்கு மீண்டும் போன் செய்து பேசிய அந்த நபர் தி.நகரில் உள்ள வடக்கு உஸ்மான் சாலை பகுதிக்கு வருமாறு கூறியுள்ளார்.

அப்போது நேரு நீங்கள் அதிகாரி என்பதற்கான அடையாளத்தை காட்டுங்கள் என்று கூறி உள்ளார். சிறிது நேரத்தில் வருகிறேன் என்று கூறி சென்றவர் அருகில் உள்ள வியாசர் தெருவுக்கு வருமாறு அழைத்து நோட்டீஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசி இருக்கிறார். இதையடுத்து நேருவும், அவரது நண்பரும் அதிகாரி என்று மிரட்டிய நபரை பிடித்து பாண்டி பஜார் போலீசில் ஒப்படைத்தனர். அவரது பெயர் வேலு என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News