உள்ளூர் செய்திகள்

கோவை ஒப்பணக்கார வீதியில் இன்று போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கோவையில் 5 இடங்களில் பயங்கர தாக்குதலுக்கு சதி- முபின் வீட்டில் சிக்கிய டைரியில் பரபரப்பு தகவல்

Published On 2022-10-26 06:16 GMT   |   Update On 2022-10-26 06:16 GMT
  • மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பு படித்துள்ள முபின் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு உள்ளார்.
  • பயங்கரவாத அமைப்பினருடன் முபின் தொடர்பில் இருந்தது அவரது உறவினர்களுக்கே தெரியாது. சாதாரணமாகவே அவர் தன் மீது சந்தேகம் வராதபடி செயல்பட்டு வந்துள்ளார்.

கோவை:

கோவையில் தீபாவளி பண்டிகையின்போது பயங்கர தாக்குதல் நடத்த திட்டமிட்டு, அது தோல்வியில் முடிந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை கோட்டை மேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு தீபாவளிக்கு முந்தைய நாளான 23-ந்தேதி காரில் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் அதே பகுதியில் வசித்து வந்த ஜமேஷா முபின் (வயது 29) என்பவர் உடல் கருகி பலியானார்.

கார் வெடித்த இடத்தில் ஆணிகளும், கோலிக்குண்டுகளும், பால்ரஸ் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன. ஜமேஷா முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கு 75 கிலோ வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதில் பொட்டாசியம் நைட்ரேட், சார்கோல், அலுமினியம் பவுடர், சல்பர் உள்ளிட்ட வெடிபொருட்கள் அடங்கும். இதையடுத்து போலீசார் 9 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே கோவை கோட்டைமேடு, எச்.எம்.பி.ஆர். தெருவில் உள்ள முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது நோட்டு புத்தகம் அமைப்பில் இருந்த ஒரு சிறு டைரியை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த டைரியை ஆய்வு செய்த போது சங்கேத குறியீடுகள், பல ரகசிய தகவல்கள் இடம்பெற்று இருந்தன. குறிப்பாக "சுற்றுலா தலங்கள்" என்ற சங்கேத குறியீட்டு பெயரில் கோவையில் உள்ள 5 முக்கிய இடங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.

கோவை ரெயில் நிலையம், கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி விக்டோரியா ஹால், ரேஸ்கோர்ஸ், போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஆகிய 5 இடங்கள் அந்த டைரியில் இடம் பெற்றிருந்தன. இந்த 5 இடங்களும் சுற்றுலா தலங்கள் அல்ல. பொதுமக்கள் தினமும் அதிக அளவு வந்து செல்லும் இடங்களாகும்.

எனவே இந்த 5 இடங்களிலும் முபின் மற்றும் அவரது கூட்டாளிகள் கார் சிலிண்டர் மூலம் மிக பயங்கர தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தி வரும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரும் இந்த சந்தேகத்தை உறுதிபடுத்தினார்.

இந்த 5 இடங்களையும் ஹிட்லிஸ்ட் என்ற பெயரில் தனியாக தொகுத்து தனி பிரிவுடன் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதன் மூலம் பல பரபரப்பான திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பு படித்துள்ள முபின் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு உள்ளார். பயங்கரவாத அமைப்பினருடன் அவர் தொடர்பில் இருந்தது அவரது உறவினர்களுக்கே தெரியாது. சாதாரணமாகவே அவர் தன் மீது சந்தேகம் வராதபடி செயல்பட்டு வந்துள்ளார்.

இதற்காக பழைய புத்தக கடை, பழைய துணி வியாபாரம் என்று அடிக்கடி தனது தொழிலை மாற்றி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளின் தூண்டுதலால் சதிச்செயலில் ஈடுபட அவர் தயாராகி இருக்கிறார். ஆனால் அவரது கூட்டாளிகள் அனைவரும் தற்போது ஜெயிலில் உள்ளனர்.

தனி நபராக இருந்து எப்படி தாக்குதல் நடத்துவது என்று அவர் ஒரு கட்டத்தில் யோசித்து உள்ளார். அதற்கும் வெளிநாட்டு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் அவருக்கு வழிகாட்டி உள்ளனர். அதன்படி அவர் யூ டியூப்பில் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி? என்பதை பார்த்துள்ளார்.

அதன்மூலமே கோவையில் தாக்குதல் நடத்த அவர் திட்டங்களை வகுத்துள்ளார். யூ டியூப்பில் அவர் தேடுதல் நடத்தி தகவல்கள் சேகரித்ததை தற்போது சைபர் கிரைம் போலீசார் கண்டு பிடித்துள்ளனர். இதன் மூலம் முபின் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முபினுக்கு உதவி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள 5 பேரும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்ட 5 இடங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததா என்று தெரியவில்லை. ஆனால் முதல் கட்ட விசாரணையில் இந்த 5 பேரும் முபினுக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்திருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

முபின் சிலிண்டர்களை ஏற்றி வந்த காரை வாங்கி கொடுத்தது முகமது தல்கா என்று தெரியவந்துள்ளது. மற்ற 4 பேரும் வெடி பொருட்களை வாங்கி உள்ளனர். வெடி பொருட்களுக்கான மூலப் பொருட்களை ஒரே இடத்தில் வாங்கினால் சந்தேகம் வரும் என்பதற்காக இந்த 4 பேரும் கோவையில் பல்வேறு இடங்களில் வாங்கி இருப்பது தனிப்படை போலீசாரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் ஆங்காங்கே வாங்கப்பட்ட வெடி பொருட்கள் அனைத்தும் முதலில் கோட்டை மேட்டில் உள்ள முபின் வீட்டில்தான் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. அங்குதான் அவர்கள் வெடி பொருட்கள் தயாரிப்பதற்கான கலவையை செய்துள்ளனர். இதனால் ஒரு கட்டத்தில் அந்த வீட்டில் இருந்து அதிக அளவு ரசாயன வாடை எழுந்துள்ளது.

இதையடுத்துதான் அவர்கள் வெடி பொருட்களை வேறு இடத்திற்கு மாற்றி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். 23-ந் தேதி மதியம் போலீசார் கோட்டை மேட்டில் உள்ள முபின் வீட்டுக்கு அதிரடி சோதனை நடத்த சென்ற போது அந்த வீடு முழுக்க தாங்க முடியாத அளவுக்கு ரசாயன வாடை வீசியதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது முபின் தனது வீட்டிலேயே வெடி பொருட்கள் கலவையை செய்தது உறுதிபடுத்துவதாக அமைந்துள்ளது. இந்த சதி வேலைக்கு முபினுக்கு வெளிநாடுகளில் இருந்து பயிற்சி கொடுத்து உதவியவர்களை அடையாளம் காணும் முயற்சி நடந்து வருகிறது.

தனிப்படை போலீசாரில் ஒரு பிரிவினர் கோவையில் முபினுக்கு உதவும் வகையில் வேறு யார் யார் உள்ளனர் என்ற பட்டியலை தயார் செய்து உள்ளனர். அந்த பட்டியலில் உள்ளவர்கள் முபின் போன்று சிலிண்டர் நிரப்பப்பட்ட கார்களை இயக்க தயாராக இருந்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. ஆனால் இதில் முன்னேற்றம் இல்லாததால் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.

முபின் கோவையில் மட்டும் தான் தாக்குதல் நடத்த திட்டமிட்டாரா அல்லது தமிழகத்தில் வேறு எங்காவது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தாரா என்பது பற்றியும் விசாரிக்கப்படுகிறது.

இதற்கிடையே முபினும், அவரது கூட்டாளிகளும் கடத்திச் சென்ற மர்மபொருள் வெடிபொருட்கள் தானா, அவை தற்போது கைப்பற்றப்பட்டு உள்ளதா அல்லது வேறு எங்காவது கடத்திச் சென்று வைக்கப்பட்டு உள்ளதா என்பது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

வெடிகுண்டு தாக்குதல் மற்றும் வெளிநாட்டினர் தொடர்பு என இந்த வழக்கு நீண்டு கொண்டே செல்வதால் வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இந்தநிலையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று கோவையில் விசாரணையை தொடங்கினர். சென்னையில் இருந்து நேற்று இரவு என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை வந்தனர். அவர்கள் கார் வெடித்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட வெடிபொருட்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக போலீசாரிடம் விவரங்களை கேட்டு பதிவு செய்து கொண்டனர். பலியான முபின் மற்றும் கைதானவர்களுக்கு ஐ.எஸ். அமைப்பினருடன் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் அவர்கள் விசாரித்தனர்.

இதுதொடர்பாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் விவரங்களை சேகரித்தாலும் வழக்கு இன்னும் மாற்றப்படவில்லை. எங்கள் வசமே உள்ளது என்றார்.

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை நேற்று வெளியிட்டார். முபின் நடத்தியது தற்கொலை தாக்குதல் என்று ஆதாரத்தையும் வெளியிட்டார். ஆனால் விசாரணை நடத்தி வரும் போலீசார் இதுபற்றி எதையும் உறுதிப்படுத்தவில்லை.

Tags:    

Similar News