மாற்றுத்திறனாளிகள் திருமணத்தில் மணமக்களுக்கு புத்தாடை வழங்கும் திட்டம்- அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்
- கடந்த சட்டப்பேரவை மானிய கோரிக்கை அறிவிப்பின்படி தற்போது வடபழனி ஆண்டவர் கோவிலில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் திருமணத்தில் மணமக்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
- வரும் காலங்களில் இத்திட்டம் கோவிலில் சிறப்பாக செயல்படுத்தப்படும் என்றும் செயல்படுத்த தேவையான நிதியினை கோவிலில் வரவு செவவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை:
சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில் மாற்றுத்திறனாளிகளின் திருமணத்தில் மணமக்களுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
கடந்த 2021-2022 சட்டமன்ற மானியக்கோரிக்கையில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கோவிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.
மேலும் கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி கோவில்கள் மற்றும் மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணங்கள் நடைபெற்று வருகின்றது.
2022 -2023-ம் ஆண்டு சட்டமன்ற மானியக்கோரிக்கையில் கோவில்களில் மற்றும் கோவிலுக்கு சொந்தமான மண்டபங்களில் நடக்கும் மாற்றுத்திறனாளிகள் திருமணங்களில் மணமக்களுக்கு கோவில் சார்பாக புத்தாடைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில் மாற்றுத்திறனாளிகள் மணமகன் பி.சிவா மற்றும் மணமகள் ஆர். சுகந்தி ஆகியோர்களுக்கு திருமணம் நடைபெற்று புத்தாடைகள் வழங்கப்பட்டது.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். மாற்றுத்திறனாளிகள் திருமணம் கடந்த ஆண்டு முதல் கோவில் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் திருமணங்களுக்கு கட்டணம் இல்லாமல் நடைபெற்று வருகிறது.
கடந்த சட்டப்பேரவை மானிய கோரிக்கை அறிவிப்பின்படி தற்போது வடபழனி ஆண்டவர் கோவிலில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் திருமணத்தில் மணமக்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. வரும் காலங்களில் இத்திட்டம் கோவிலில் சிறப்பாக செயல்படுத்தப்படும் என்றும் செயல்படுத்த தேவையான நிதியினை கோவிலில் வரவு செவவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர்ஜெ.கருணாநிதி, இணை ஆணையர் தனபால், வடபழனி துணை ஆணையர் முல்லை உள்பட பலர் கலந்து கொண்டனர்.