மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்- திருவிழாவுக்கு சென்ற டாஸ்மாக் ஊழியர் உள்பட 3 பேர் பலி
- ராஜேந்திரன் கவுண்டர் தோட்டம் என்ற இடத்தில் வந்தபோது இரண்டு மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
- இந்த விபத்தில் ரெங்கசாமி, கார்த்திக் ஆகிய இருவரும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள கொடும்பாளூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கவுதமன் (வயது 20), பிரவீன் (24) மற்றும் சூர்யபிரகாஷ் (24).
இவர்கள் மூன்று பேரும் ஒரே மோட்டார்சைக்கிளில் கொடும்பாளூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று வரும் திருவிழாவை பார்ப்பதற்காக நேற்று இரவு புறப்பட்டனர்.
அதேபோல் கொடும்பாளூரை சேர்ந்த டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனையாளராக பணியாற்றி வரும் ரெங்கசாமி (45), வடகாட்டுப்பட்டியை சேர்ந்த கார்த்திக் (25) இருவரும் கொடும்பாளூரில் இருந்து மூவர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
ராஜேந்திரன் கவுண்டர் தோட்டம் என்ற இடத்தில் வந்தபோது இரண்டு மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ரெங்கசாமி, கார்த்திக் ஆகிய இருவரும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கவுதமன் உள்பட 3 பேரும் பலத்த காயம் அடைந்த நடுரோட்டில் உயிருக்கு போராடினர். அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் செல்லும் வழியிலேயே கவுதமன் இறந்தார். மற்ற இருவரும் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்தில் பலியான மூன்று பேரின் உடல்களும் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த கோர விபத்து குறித்து விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ் பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருவிழாவுக்கு சென்ற 3 பேர் விபத்தில் பலியானது அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.