ஆலங்குளம் அருகே சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர்-தொழிலாளி பலி
- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் மற்றும் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தனர்.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள முத்துகிருஷ்ணபேரியை சேர்ந்தவர் அரி கிருஷ்ணன் (வயது 42). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் நேற்றிரவு சுரண்டை சாலையில் முத்துகிருஷ்ணாபேரிக்கு தென்புறம் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தென்காசி ரெயில் நகரை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகன் மதி பிரவீன்(20) ஆலங்குளத்தில் இருந்து சுரண்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிள் அரிகிருஷ்ணன் ஓட்டிச்சென்ற சைக்கிளின் பின்பகுதியில் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் அரிகிருஷ்ணனும், மோட்டார் சைக்கிளில் வந்த மதி பிரவீனும் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து வீ.கே.புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் அரிகிருஷ்ணனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மதி பிரவீனை மீட்டு தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மதி பிரவீன் பரிதாபமாக இறந்தார். அதே நேரத்தில் அரிகிருஷ்ணனும் இறந்துவிட்டார். மதி பிரவீன் ஆலங்குளத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
தினமும் பணியை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் தென்காசிக்கு சென்றுவந்துள்ளார். தற்போது நெல்லை-தென்காசி இடையே 4 வழிச்சாலை பணிகள் நடைபெறுவதால் அந்த வழியாக செல்லாமல் மாற்றுப்பாதையாக சுரண்டை சென்று அங்கிருந்து சாம்பவர்வடகரை வழியாக ஊருக்கு செல்லும் வழியில் சென்று வந்துள்ளார். நேற்றும் அதேபோல் இரவில் ஊருக்கு புறப்பட்டு சென்றபோது தான் இந்த விபத்து நடந்துள்ளது.