உள்ளூர் செய்திகள்

மலைப்பகுதியில் தீ வைத்தவர் கைது

Published On 2024-04-01 04:47 GMT   |   Update On 2024-04-01 04:47 GMT
  • குடிபோதையில் சிகரெட் பிடித்து விட்டு தீயை அணைக்காமல் போட்டுச் சென்றது தெரிய வந்தது.
  • கண்ணனை கைது செய்து உத்தமபாளையம் சிறையில் அடைத்தனர்.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களில் காட்டுத் தீ பற்றி வருகிறது. குறிப்பாக குரங்கணி, மரக்காமலை, ஏணிப்பாறை உள்ளிட்ட வனப்பகுதிகளில் அதிகளவில் பற்றி எரிந்த காட்டுத்தீயால் பல 100 ஏக்கர் சுற்றளவில் அரிய வகை மரம், செடி, கொடிகள், வனவிலங்குகள், பறவைகள், ஊர்வன ஆகியவை அழியும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குரங்கணி கொம்பு தூக்கி மலைப்பகுதியில் வனத்துறை அருகே உள்ள தனியார் தோட்டப்பகுதியில் காட்டு தீ பற்றி எரிந்து பிச்சாங்கரை புலம் பகுதி வரை பரவியது.

காட்டுத்தீயை அணைக்க சென்ற வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தபொழுது அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வரும் போடி புதூரில் வசித்து வரும் கண்ணன் (வயது 38) என்பவர் அப்பகுதியில் குடிபோதையில் சிகரெட் பிடித்து விட்டு தீயை அணைக்காமல் போட்டுச் சென்றது தெரிய வந்தது.

ஏற்கனவே கடுமையான வெயில் காரணமாக காய்ந்து போன மரம், செடி, கொடிகள் எளிதில் தீ பற்றி வனப்பகுதியில் காட்டு தீ பற்றி உள்ளது.

கண்ணனிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர் குடிபோதையில் தீ வைத்தது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கண்ணனை கைது செய்து உத்தமபாளையம் சிறையில் அடைத்தனர்.

மேலும் தற்போது தேனி பாராளுமன்ற தொகுதி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் டாப் ஸ்டேஷன், உருவாக்குடி, சென்ட்ரல் போன்ற பகுதிகளுக்கு குதிரைகள் மூலம் வாக்குப்பெட்டிகள், வாக்கு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட உள்ளது.

இந்த சூழலில் ஆங்காங்கே சமூக விரோதிகளின் செயல்பாடுகள் காரணமாக காட்டுத்தீ பற்றி எரிவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News