மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அரசு உடனடியாக வழங்க வேண்டும்- என்.ஆர்.தனபாலன்
- தண்ணீரில் விஷ பூச்சிகளும், பாம்புகளும் நடமாடுவதால் அவற்றை வெளியேற்றும் நடவடிக்கையை அரசு போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்.
- மக்களின் அச்சத்தை போக்கி, நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும். தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தி, தொற்று நோய் பரவாமல் தடுக்க வேண்டும்.
சென்னை:
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அவர்களை பத்திரமாக மீட்டு, தங்குவதற்கு இடம் கொடுத்து, உணவு, உடைகள் வழங்கி, கொசுத் தொல்லை மற்றும் குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ள போர்வைகள் வழங்கிட வேண்டும்.
சென்னை மாநகராட்சியும், அரசும் துரிதமாக செயல்பட்டு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் பாதுகாக்கிற பொறுப்பும் கடமையும் அரசுக்கு உண்டு என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். மேலும் தண்ணீரில் விஷ பூச்சிகளும், பாம்புகளும் நடமாடுவதால் அவற்றை வெளியேற்றும் நடவடிக்கையை அரசு போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். மக்களின் அச்சத்தை போக்கி, நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும். தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தி, தொற்று நோய் பரவாமல் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.