உள்ளூர் செய்திகள்

ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம்- 144 உறுப்பினர்கள் ஆதரவு

Published On 2023-04-10 06:12 GMT   |   Update On 2023-04-10 08:55 GMT
  • ஓட்டெடுப்பு நடைபெறுவதற்கு முன்பே நேரமில்லா நேரத்தில் அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்துவிட்டதால் அவர்களது இருக்கை காலியாக இருந்தது.
  • சட்டசபையில் உள்ள 6 டிவிசன் வாரியாக உறுப்பினர்களை எண்ணும் பணி நடந்தது.

சென்னை:

சட்டசபையில் கவர்னரின் செயல்பாடுகள் பற்றியோ, அவரது நடவடிக்கைகள் பற்றியோ விமர்சிக்க இயலாது. ஆனால் அவ்வாறு கவர்னரை பற்றி விமர்சிக்க வேண்டும் என்றால் சட்டப் பேரவை விதி 92(7)-ல் அடங்கியுள்ள 'ஆளுனரின் நடத்தை குறித்து' என்ற சொற்றொடர், விவாதத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் கவர்னரின் பெயரை பயன்படுத்துவது என்ற சொற்றொடர் மற்றும் விதி 287-ல் அடங்கிய 92(7) ஆகியவற்றின் பயன்பாடுகளை நிறுத்தி வைத்து அரசினர் தனித்தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இந்த தீர்மானத்தை சபையில் பெரும்பான்மை இருந்தால்தான் எடுத்துக் கொள்ள முடியும் என்பதால் சபாநாயகர், உறுப்பினர்களின் ஆதரவு எண்ணிக்கையை கணக்கிட உத்தரவிட்டார். இதற்காக சட்டசபையின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டன.

சட்டசபைக்குள் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் யாரும் ஓட்டெடுப்பு முடியும் வரை எழுந்து வெளியே செல்லக்கூடாது என சபாநாயகர் அறிவுறுத்தினார்.

இந்த ஓட்டெடுப்பு நடைபெறுவதற்கு முன்பே நேரமில்லா நேரத்தில் அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்துவிட்டதால் அவர்களது இருக்கை காலியாக இருந்தது.

ஆனால் பா.ஜனதா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி (நாகர் கோவில்), டாக்டர் சி.சரஸ்வதி (மொடக்குறிச்சி) ஆகியோர் அவையில் இருந்தனர். இவர்கள் கடைசி சமயத்தில் தான் எழுந்து வெளியே செல்ல முற்பட்டனர்.

ஆனால் சட்டமன்ற கதவுகள் மூடப்பட்டு இருந்ததால் வெளியே செல்ல முடியவில்லை.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஓட்டெடுப்பு நடப்பதால் நீங்கள் இப்போது வெளியே செல்ல இயலாது. தீர்மானத்தை ஆதரித்தோ, எதிர்த்தோ நீங்கள் ஓட்டெடுப்பில் பங்கேற்கலாம் என்றார்.

அதன்பிறகு ஓட்டெடுப்பு எண்ணிக்கையின் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் தொடங்கப்பட்டது. அதன்படி சட்டசபையில் உள்ள 6 டிவிசன் வாரியாக உறுப்பினர்களை எண்ணும் பணி நடந்தது.

அதில் 144 பேர் தீர்மானத்தை ஆதரித்தனர். பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் எதிர்த்தனர். யாரும் நடுநிலை வகிக்கவில்லை.

ஓட்டெடுப்பு முடிந்ததும் சபாநாயகர் கூறுகையில், "அவை முன்னவரின் தீர்மானத்தை 146 பேரில் 144 பேர் ஆதரித்துள்ளதால் சட்டசபை விதி 287-ன் கீழ் 92 (7)-ல் உள்ள சில குறிப்பிட்ட சொற்றொடர்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது" என்றார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னரின் செயல்பாடு குறித்து விவாதிக்கும் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.

சட்டசபையில் கவர்னரை விமர்சித்து பேசும் இதேபோல் ஒரு விவகாரம் ஜெயலலிதா ஆட்சியின் போது நடைபெற்றுள்ளது.

தமிழக கவர்னராக சென்னாரெட்டி இருந்த போது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின்போது சென்னாரெட்டி பற்றி சட்டசபையில் பேசுவதற்காக விதியை தளத்தினார்கள். அதேபோன்ற விவகாரம் இப்போது மீண்டும் நடந்து உள்ளது.

Tags:    

Similar News