உள்ளூர் செய்திகள்

பாவூர்சத்திரத்தில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி 2 வாலிபர்கள் பலி

Published On 2024-03-31 05:02 GMT   |   Update On 2024-03-31 05:02 GMT
  • படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 5 பேரையும் மீட்டனர்
  • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி:

தென்காசி அருகே உள்ள புல்லுக்காட்டுவலசை சுடலைமாடன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ராஜா (வயது 20). அதே ஊரை சேர்ந்தவர்கள் கணேசன் மகன் மூர்த்தி(23), பேச்சி மகன் ஆனந்த் (23). இவர்கள் 3 பேரும் கட்டிட தொழிலாளிகள்.

இந்நிலையில் 3 பேரும் நேற்று மாலையில் சக நண்பரான ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையை சேர்ந்த ராமர் (23) என்பவரை தங்களது ஊரில் நடைபெறும் கோவில் கொடை விழாவை காண அழைப்பதற்காக 2 மோட்டார் சைக்கிளில் ஊத்துமலைக்கு சென்றுள்ளனர்.

பின்னர் அவரை அழைத்துக்கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் மூர்த்தி, ராஜா மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் ராமர், ஆனந்த் ஆகிய 4 பேரும் பாவூர்சத்திரத்தை அடுத்துள்ள கே.டி.சி. நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் இரவில் புல்லுக்காட்டு வலசை நோக்கி 4 பேரும் சென்று கொண்டிருந்தபோது பாவூர்சத்திரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ரமேஷ்(30) என்பவர் வேலைக்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரம் நோக்கி வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென அவர்களது மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கியது.

இதில் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேரும் தூக்கி வீசப்பட்டு அனைவரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர். இதனை அந்த வழியே சென்ற மற்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பார்த்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தார். அவர்கள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 5 பேரையும் மீட்டனர். அப்போது ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

மற்ற 4 பேரையும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த ஊத்துமலையை சேர்ந்த ராமர் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் சிக்கிய ராஜா, மூர்த்தி, ஆனந்த் ஆகிய 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 3 மோட்டார் சைக்கிள்களும் சுக்குநூறாக நொறுங்கியது.

Tags:    

Similar News