உள்ளூர் செய்திகள்

நந்தனம் ஆவின் தலைமையகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

Published On 2022-09-21 11:21 GMT   |   Update On 2022-09-21 11:21 GMT
  • ஆவின் பால் முகவர்களுக்கான விண்ணப்பங்களை முறையாக பரிசீலிக்காமல் அவர்களை அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • மாற்றுத்திறனாளிகளை அலுவலகத்துக்குள் அழைத்து நிர்வாக இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை அவரிடம் தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

சென்னை:

சென்னை நந்தனத்தில் ஆவின் தலைமையகம் உள்ளது. இன்று காலையில் இந்த அலுவலகத்துக்கு மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் வந்தனர். அவர்கள் ஆவின் தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆவின் பால் முகவர்களுக்கான விண்ணப்பங்களை முறையாக பரிசீலிக்காமல் அவர்களை அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்து மாற்றுத்திறனாளிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களை அலுவலகத்துக்குள் அழைத்து நிர்வாக இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை அவரிடம் தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

அப்போது பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வீடியோ காலில் பேசினார். அப்போது தங்களின் பால் முகவர் விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் ஆவின் அலுவலகத்தில் அலைக்கழிப்பதாகவும், பல ஆவின் அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக செல்வதற்காக சாய்வுதள படிக்கட்டு இல்லை என்றும் புகார் தெரிவித்தனர்.

அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சா.மு.நாசர் உறுதி அளித்தார். மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கமாட்டோம் என்று ஆவின் நிர்வாகம் தரப்பில் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக அனைத்து ஆவின் அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் வற்புறுத்தினார்கள்.

தற்காலிகமாக போராட்டத்தை அவர்கள் கைவிட்டுள்ளனர். ஆனாலும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டால் தான் அங்கிருந்து கலைந்து செல்வோம் என்று கூறி மாற்றுத்திறனாளிகள் அங்கேயே காத்திருந்தனர்.

Tags:    

Similar News