உள்ளூர் செய்திகள்

தருமபுரி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் எச்.ராஜா மீது போலீசில் புகார்

Published On 2024-11-09 04:52 GMT   |   Update On 2024-11-09 04:52 GMT
  • பொய்யான செய்திகளை பரப்பி, மதக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேசியுள்ளார்.
  • மனித நேய மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட தலைவர் சுபேதார் தலைமையில் கட்சியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரனிடம் மனு கொடுத்தனர்.

தருமபுரி:

அவதூறு கருத்துக்களை பரப்பும் பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட தலைவர் சுபேதார் தலைமையில் கட்சியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரனிடம் மனு கொடுத்தனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளரின் தலைவராக இருந்து வரும் எச்.ராஜா என்பவர் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பாபநாசம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் குறித்தும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்துள்ளார். மேலும், அவர் பொய்யான செய்திகளை பரப்பி, மதக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேசியுள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாஹ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் மீது தேவையற்ற அவதூறு பரப்ப செய்து, மக்களுக்கு இடையில் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தும் வகையில் எச்.ராஜா செயல்படுகிறார் எனும் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மனு கொடுக்கும் போது மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஷாஜகான், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஜீலான், நகர தலைவர் சாதிக், நகர துணை செயலாளர் ஏஜாஸ், முன்னாள் மாவட்ட நிர்வாகி நவுஷாத் ஆகியோர் உடனிருந்தனர். 

Tags:    

Similar News