இந்து மதம்-யாகம் வளர்ப்பது பற்றி அவதூறு பேச்சு: திண்டுக்கல் லியோனி மீது கமிஷனர் ஆபீசில் புகார்
- ஒரு சிலர் பிறந்த நாள் விழாவில் ஐயர்களை வைத்து யாகம் நடத்துவார்கள். அந்த யாகத்தில் அரை மூட்டை விறகை எடுத்து போடுவார்கள்.
- எனக்கு 60 வயது ஏன் வந்தது என்று அவர் நொந்து நூடுல்ஸ் ஆகி விடுவார்.
சென்னை:
பாரத் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் பிரபு, செயலாளர் டில்லி பாபு ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், திண்டுக்கல் லியோனி மீது புகார் அளித்துள்ளனர். புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் 60-வது பிறந்த நாள் விழாவில் திண்டுக்கல் லியோனி இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார்.
ஒரு சிலர் பிறந்த நாள் விழாவில் ஐயர்களை வைத்து யாகம் நடத்துவார்கள். அந்த யாகத்தில் அரை மூட்டை விறகை எடுத்து போடுவார்கள். எனக்கு 60 வயது ஏன் வந்தது என்று அவர் நொந்து நூடுல்ஸ் ஆகி விடுவார்.
கோவிலில் பொங்கல் வாங்கி தின்றுவிட்டு கையை துடைக்க துணி எடுத்து வரவில்லை என்று சுவற்றில் துடைத்து விட்டு கையை முகர்ந்து பார்த்து உள்ளார். அதை 15க்கும் மேற்பட்டோர் வேடிக்கை பார்த்து அங்கே ஏதோ ஒரு சாமி இருக்குடா வணங்குகிறான்.
நம்ம எல்லாரும் விட்டுட்டோமே என்று அனைவரும் வரிசையில் நின்று அந்த இடத்தை தொட்டுத் தொட்டு கும்பிடுவார்கள். இரண்டு மாதம் கழித்து ஆயிரம் பேர் தொட்டு கும்பிடுவார்கள்.
ஒரு வருடம் கழித்து அந்த இடத்தில் கும்பாபிஷேகமே நடக்கும்.
ஒருவன் பொங்கல் தின்றுவிட்டு கையை துடைத்த இடத்தையே சாமி ஆக்கிட்டார்களே என்று இந்துக்கள் மனது மிகவும் வேதனை அடையும் அளவிற்கு பேசியுள்ளார்.
யாகம் வளர்க்கும் முறை மிகவும் நேர்த்தியானது. சக்தி வாய்ந்ததாக இந்துக்கள் கருதுகின்றனர்.
கல்லையும் கடவுளாக வணங்கும் ஒரே மதம் இந்து மதம். இந்துக்களின் மனதை மிகவும் கேவலப்படுத்தி, கொச்சைப்படுத்தும் வகையில் லியோனி பேசியுள்ளார்.
எனவே அவர் வகிக்கும் பாட நூல் கழக தலைவர் பதவியை சட்டப்படி நீக்க ஆவன செய்ய வேண்டும். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.