உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட கார்.

திருப்பூரில் ஒப்பந்ததாரர் மகனை ரூ.20 லட்சம் கேட்டு கடத்திய கும்பல்- போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்

Published On 2023-05-10 10:22 GMT   |   Update On 2023-05-10 10:22 GMT
  • கைதான முகமது அனிபா மருதமுத்துவிடம் வேலை செய்து வந்துள்ளார்.
  • ஒரு நகராட்சிக்கான கழிப்பிட கட்டணத்தை வசூல் செய்து அதனை மருதமுத்துவிடம் கொடுத்து வந்துள்ளார்.

திருப்பூர்:

திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்தவர் மருதமுத்து (வயது 52). இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஆகும். இவர் திருப்பூர் மாநகராட்சி மற்றும் 5 நகராட்சிகளில் கட்டண கழிப்பிட ஒப்பந்ததாரராக உள்ளார். இவரது மகன் கண்ணன் (26). இவர் நேற்று லட்சுமி நகரில் உள்ள மாநகராட்சி கட்டண கழிப்பிடத்தில் வசூலான பணத்தை வாங்குவதற்காக சென்றுள்ளார்.

அப்போது காரில் வந்த 4 பேர் கும்பல் கண்ணனை கடத்தி சென்றனர். பின்னர் கண்ணனின் தாயாரிடம் செல்போனில் பேசிய நபர்கள், ரூ.20 லட்சம் கொடுத்தால் கண்ணனை உயிரோடு விடுவோம். இல்லையென்றால் கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மருதமுத்து உடனடியாக திருப்பூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். உதவி கமிஷனர் அனில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் கண்ணனை கடத்தி சென்ற கும்பல் யார், எதற்காக கடத்தினர் என்று விசாரணை நடத்தினர்.

அப்போது கடத்தல் கும்பல் கண்ணனை கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நெகமம் பகுதியில் உள்ள வீட்டில் அடைத்து வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் அவரை மீட்டனர்.

மேலும் அவரை கடத்திய மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த முகமது அனிபா (51), சிவகங்கையை சேர்ந்த கார்த்திக் (35), தேனி எல்லப்பட்டியை சேர்ந்த சஞ்சீவ் (32), சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த லட்சுமணன் (38) ஆகிய 4 பேரை வடக்கு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் கண்ணனை கடத்தியதற்காக காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல் கிடைத்தது.

கைதான முகமது அனிபா மருதமுத்துவிடம் வேலை செய்து வந்துள்ளார். மேலும் ஒரு நகராட்சிக்கான கழிப்பிட கட்டணத்தை வசூல் செய்து அதனை மருதமுத்துவிடம் கொடுத்து வந்துள்ளார். இதனால் மருதமுத்துவிடம் அதிகம் பணம் இருப்பதை அறிந்த முகமதுஅனிபா, பணத்தை பறிக்க திட்டமிட்டார். அப்போது மருதமுத்துவின் மகன் கண்ணனை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டார்.

இதற்காக தனது நண்பர்களான கோவை காந்திபுரத்தில் உள்ள மெஸ்சில் பணிபுரியும் கார்த்திக், சஞ்சீவ், லட்சுமணன் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு அவர்களும் சம்மதித்துள்ளனர். கண்ணனை கடத்தி பணம் பறித்தால் அதில் ஒரு தொகையை தருவதாக முகமது அனிபா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நண்பர்கள் 3பேரையும் திருப்பூர் வரவழைத்த முகமதுஅனிபா புஷ்பா தியேட்டர் ரவுண்டானா அருகே உள்ள லாட்ஜில் தங்க வைத்தார். மேலும் மருதமுத்துவின் மகன் கண்ணன் தினமும் கழிப்பிட கட்டண வசூல் பணத்தை வீட்டிற்கு கொண்டு செல்வதை 4 பேரும் 2 நாட்களாக நோட்டமிட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அவரை கடத்த முகமது அனிபா மளிகை கடை நடத்தி வரும் தனது நண்பர் ஒருவரிடம் இருந்து காரை வாங்கியுள்ளார். அதன் மூலம் நேற்று கண்ணனை கடத்தியுள்ளனர். பின்னர் பொள்ளாச்சி நெகமத்திற்கு சென்ற அவர்கள் அங்குள்ள வீட்டில் கண்ணனை அடைத்து வைத்ததுடன், கண்ணனின் தாய்க்கு போன் செய்து ரூ.20 லட்சம் பணம் கேட்டுள்ளனர். பணம் கொடுக்காவிட்டால் கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி 4பேரையும் கைது செய்தனர். இந்த கடத்தல் சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர். ரூ.20 லட்சம் பணம் கேட்டு வாலிபர் கடத்தப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News