உள்ளூர் செய்திகள்
பாபு.

புஞ்சைபுளியம்பட்டியில் ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்தி தாக்கிய கும்பல்

Published On 2022-11-19 10:25 GMT   |   Update On 2022-11-19 10:25 GMT
  • ராஜேஸ்வரி புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் மாயமான தனது கணவரை மீட்டு தர வேண்டும் என புகார் அளித்தார்.
  • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பாபுவை கொடுக்கல் வாங்கல் தகராறில் 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றது தெரியவந்தது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த காரப்பாடி அருகே செல்லம்பாளையம், வி.கே.சி. நகர், ஐஸ்வர்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் பாபு (53). ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி ராஜேஸ்வரி (41).

இந்நிலையில் கடந்த 14-ந்தேதி பாபு வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாக கூறி காரில் புறப்பட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவருடன் காரில் 4 பேர் சென்றதாக அதே ஊரை சேர்ந்த ஒருவர் பாபு மனைவியிடம் கூறியுள்ளார்.

2 நாட்கள் ஆகியும் பாபு வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மனைவி ராஜேஸ்வரி பல்வேறு இடங்களில் கணவரை தேடினார். எனினும் அவர் குறித்து தகவல் கிடைக்கவில்லை.

இதையடுத்து ராஜேஸ்வரி புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் மாயமான தனது கணவரை மீட்டு தர வேண்டும் என புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பாபுவை கொடுக்கல் வாங்கல் தகராறில் 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றது தெரியவந்தது.

இந்நிலையில் 2 நாட்களுக்கு பிறகு பாபுவை அந்த கடத்தல் கும்பல் மதுரையில் இறக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர். பின்னர் பாபு அங்கிருந்து வீட்டிற்கு வந்துள்ளார்.

அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சம்பவத்தன்று தான் காரில் சென்ற போது அடையாளம் தெரியாத 4 பேர் திடீரென எனது காரை மறித்து காருக்குள் ஏறி தன்னை அடித்து உதைத்து கடத்தி சென்றதாகவும், ஒரு நாள் முழுவதும் தன்னை மறைவான இடத்தில் அடைத்து வைத்து பணம் கேட்டு தாக்கியதாகவும், பின்னர் அந்த கும்பல் என்னை மதுரையில் இறக்கிவிட்டு சென்று விட்டதாகவும் கூறினார்.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் கடத்தல் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ரியல் எஸ்டேட் அதிபர் பாபுவை கடத்தியது ராமநாதபுரத்தைச் சேர்ந்த கும்பல் என்பது தெரியவந்து உள்ளது. இதையடுத்து அவர்களை பிடித்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News