உள்ளூர் செய்திகள்

ஆந்திராவில் போலீஸ்காரரை கார் ஏற்றி கொலை செய்த முக்கிய குற்றவாளி விழுப்புரம் கோர்ட்டில் சரண்

Published On 2024-02-14 07:01 GMT   |   Update On 2024-02-14 07:01 GMT
  • செம்மர கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த போலீசார் கடந்த 6-ந்தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்துக்கொண்டிருந்த காரை வழிமறித்து நிறுத்த முயன்றனர்.
  • ஆந்திர மாநில செம்மர கடத்தல் பிரிவு போலீஸ்காரர் கணேஷ் (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விழுப்புரம்:

ஆந்திர மாநிலம் திருப்பதி, கடப்பா, பாக்ரா பேட்டை உள்ளிட்ட ஷேஷாசலம் வனப்பகுதியில் விலையுயர்ந்த ஏராளமான செம்மரங்கள் உள்ளன. இந்த செம்மரங்கள் வெளிநாடுகளில் அதிக அளவு விலைபோவதால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த செம்மர வியாபாரிகள் தமிழக பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்களை கொண்டு செம்மரங்களை வெட்டி எடுத்து கடத்தி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் அன்னமைய்யா மாவட்டம் குண்ட்ரவாரி பள்ளி அருகே உள்ள ஆந்திர மாநில சோதனைச்சாவடியில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த போலீசார் கடந்த 6-ந்தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்துக்கொண்டிருந்த காரை வழிமறித்து நிறுத்த முயன்றனர். அப்போது அந்த கார் நிற்காமல் வழிமறித்த போலீஸ்காரர் மீது மோதி சென்றுவிட்டது. இந்த சம்பவத்தில் ஆந்திர மாநில செம்மர கடத்தல் பிரிவு போலீஸ்காரர் கணேஷ் (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக செம்மர கடத்தல் கும்பல் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கீழ்நிலவூர் பகுதியை சேர்ந்த ராமன் (வயது 31) உள்ளிட்ட 8 பேர் மீது ஆந்திர மாநிலம் கே.வி.பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள 6 பேரை தனிப்படை அமைத்து ஆந்திர மாநில போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 2 தினங்களாக கல்வராயன்மலையில் முகாமிட்டு ஆந்திர மாநில போலீசார் தேடி வரும் நிலையில், முக்கிய குற்றவாளியான ராமன், விழுப்புரம் 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி அகிலா முன்பாக இன்று சரணடைந்தார்.

Tags:    

Similar News