கன்னியாகுமரி கடலில் படகு மூலம் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை
- கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து ஜீப் மூலம் போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றி கண்கணித்து வருகிறார்கள்.
- நெல்லை குமரி மாவட்ட கடலோரப்பகுதிகளில் அமைந்துள்ள 10-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளில் போலீசார் இரவு-பகலாக அதிரடி வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
கடல் வழியாக படகு மூலம் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஆண்டுதோறும் கடலில் படகு மூலம் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு போலீசார் இந்திய கடலோர காவல் படை இந்திய கடற்படை மீன்வளத்துறை மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து தமிழகத்தின் கடலோரப் பகுதியில் "சீ விஜில்" என்ற பாதுகாப்பு ஒத்திகையை இன்றும் நாளையும் நடத்துகிறார்கள்.
அதன்படி கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு போலீசார் 2 அதி நவீன ரோந்து படகு மூலம் இன்று காலை 8 மணி முதல் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து ஒரு அதிநவீன ரோந்து படகில் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் தலைமையில் ஒரு குழுவினர் கூடங்குளம் கடல் பகுதி வரைக்கும் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதேபோல இன்னொரு அதிநவீன ரோந்து படகில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் தலைமையில் மற்றொரு குழுவினர் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து குளச்சல் கடல் பகுதி வரைக்கும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இது தவிர கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான குமரி மாவட்டத்தில் உள்ள 72 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள 48 கடற்கரை கிராமங்களில் போலீசார் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து ஜீப் மூலம் போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றி கண்கணித்து வருகிறார்கள். நெல்லை குமரி மாவட்ட கடலோரப்பகுதிகளில் அமைந்துள்ள 10-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளில் போலீசார் இரவு-பகலாக அதிரடி வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். அதேபோல லாட்ஜ்களிலும் சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்று உள்ளூர் போலீசாரும் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த பாதுகாப்பு ஒத்திகை நாளை மாலை 6 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ந்து நடக்கிறது.