சுவாமி சிலையை மாற்றி புதிய சிலையை வைக்க முயற்சி- போலீசார் தடுத்து நிறுத்தினர்
- 12 ஆண்டுகளுக்கு முன்பு கிணற்றில் போடப்பட்ட அம்மன் சிலை மீண்டும் எடுக்கப்பட்டு முறைப்படி கோவிலில் வைத்து வணங்கி வந்தனர்.
- இதற்கு கோவில் வரிதாரர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள குட்டம் கிராமத்தில் பழமையான ஆனந்தவள்ளி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் அமர்ந்த நிலையில் இருந்த ஆனந்த வள்ளி அம்மன் சிலை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டு சுவாமி நின்ற நிலையில் புதிதாக சிலை வடிவமைக்கப்பட்டு வழிபட்டு வந்தனர். அமர்ந்த நிலையில் இருந்த ஆனந்தவள்ளி அம்மன் சிலை அருகில் உள்ள கிணற்றில் போடப்பட்டது. சென்ற ஆண்டு நின்ற நிலையில் இருந்த அம்மன் சிலை மர்மநபர்களால் உடைக்கப்பட்டது.
அதை தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு முன்பு கிணற்றில் போடப்பட்ட அம்மன் சிலை மீண்டும் எடுக்கப்பட்டு முறைப்படி கோவிலில் வைத்து வணங்கி வந்தனர். இதற்கு கோவில் வரிதாரர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் 2 வாகனங்களில் நின்ற நிலையில் புதிய அம்மன் சிலை மற்றும் பீடத்தை ஏற்றிகொண்டு குட்டம் ஆனந்தவள்ளி அம்மன் கோவிலுக்கு சிலர் வந்தனர். அமர்ந்த நிலையில் உள்ள அம்மன் சிலைக்கு பதிலாக நின்ற நிலையில் புதிய அம்மன் சிலை வைக்க முயற்சி நடப்பதாக உவரி போலீசுக்கு ஒருதரப்பினர் புகார் கொடுத்தனர். உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் விரைந்து சென்று புதிய அம்மன் சிலையையும், பீடத்தையும் வாகனங்களுடன் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் நேற்று நள்ளிரவில் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.