உள்ளூர் செய்திகள்

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்- பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2023-06-14 07:21 GMT   |   Update On 2023-06-14 07:21 GMT
  • செந்தில் பாலாஜி தன் மீது குற்றம் இல்லை என நிரூபிக்கும் வரையில் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
  • செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து தமிழக அரசு விலக்கி வைப்பது, அரசிற்கும், தி.மு.க.விற்கும், மக்களுக்கும் நல்லது.

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான். தப்பை செய்தவன் தண்டனை அனுபவிப்பான் என்பதை மூதாதையர்கள் கூறியுள்ளனர். யாராக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் அது பொருந்தும்.

தான் தூய்மையானவன் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது. ஆனால் இதற்கு தி.மு.க. துணை போகக்கூடாது.

செந்தில் பாலாஜி தன் மீது குற்றம் இல்லை என நிரூபிக்கும் வரையில் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகி இருக்க வேண்டும். செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து தமிழக அரசு விலக்கி வைப்பது, அரசிற்கும் தி.மு.க.விற்கும், மக்களுக்கும் நல்லது. அவருக்கு துணை நின்றால் தி.மு.க. அரசாங்கம் ஆள்வதற்கு அருகதை அற்றவர்கள் ஆவார்கள்.

இது 2015-ல் உள்ள பழைய வழக்கு, அப்போது தி.மு.க.வினர், அவர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லியிருந்தார்கள், அதே மனிதர் தி.மு.க.விற்கு வந்தவுடன் கங்கையில் குளித்து புனிதமானவர் என்பதா? தமிழக அரசு அவருக்கு ஆதரவு கொடுக்க கூடாது. அப்படி ஆதரவு கொடுத்தால் அது ஊழலுக்கு துணை போகும் செயல்.

இதுவரை தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நேர்மையாக மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News