திருப்பூர் திரும்பிய பனியன் நிறுவன தொழிலாளர்கள்
- தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 13-ந்தேதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
- திருப்பூர் ரெயில் நிலையத்தில் தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது.
திருப்பூர்:
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து பனியன் நிறுவன தொழிலாளர்கள் திருப்பூருக்கு திரும்பியதால் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் தமிழகம் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் வேலை செய்து வருகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
இதன் பின்னர் குறைந்தது 7 முதல் 10 நாட்கள் வரை விடுமுறை எடுத்து விட்டு திருப்பூருக்கு திரும்புவது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை கடந்த 15-ந்தேதி கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை கொண்டாட தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 13-ந்தேதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
இதனால் திருப்பூரில் உள்ள பெரும்பாலான பனியன் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டன. இந்நிலையில் ஒரு வார விடுமுறைக்கு பின்னர் இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் திறந்து செயல்பட தொடங்கின. இதனால் பனியன் நிறுவன தொழிலாளர்கள் திருப்பூருக்கு காலை முதலே வந்த வண்ணம் இருந்தனர். இதன் காரணமாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த அரசு பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.