பூந்தமல்லியில் பராமரிப்பு இல்லாத நகராட்சி பூங்கா
- பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடவும் வந்து செல்கிறார்கள்.
- பூங்காக்களை நகராட்சி நிர்வாகம் பராமரிப்பதே இல்லை.
பூந்தமல்லி:
பூந்தமல்லி நகராட்சியில் மொத்தம் 21-வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பல பூங்காக்கள் முறையான பராமரிப்பு இன்றியும், விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் பழுதடைந்தும், புதர் மண்டியும், விஷ புச்சிகள் குடியிருக்கும் இடமாகவும் மாறி வருகிறது.
குறிப்பாக பூந்தமல்லி நண்பர்கள் நகரில் உள்ள நகராட்சி பூங்கா பொது மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.
இந்த பூங்காவுக்கு தினந்தோறும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளவும், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடவும் வந்து செல்கிறார்கள்.
ஆனால் இங்கு ராட்டினம், சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்ட குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் அனைத்தும் உடைந்து கிடக்கின்றன. இதனை குழந்தைகள் ஏக்கத்துடன் பார்த்து செல்கிறார்கள். மேலும் ஏற்கனவே இருந்த குடிநீர், கழிப்பறை வசதிகள் அனைத்தும் இப்போது இல்லை. கழிவறைகள் உடைந்தும், குடிநீர் குழாய் துருபிடித்தும் காணப்படுகிறது. பூங்காவை சுற்றி நடந்து செல்லும் பாதையும் பல இடங்களில் இடிந்து கிடப்பதால் அதில் செல்லும் வயதானவர்கள் அடிக்கடி தடுமாறி விழும் நிலையும் நீடித்து வருகிறது.
எனவே பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் நண்பர்கள் நகரில் உள்ள நகராட்சி பூங்காவை முறையாக பராமரித்து குழந்தைகள் விளையாட்டு சாதனங்களை புதிதாக அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
பூந்தமல்லி நகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்களை நகராட்சி நிர்வாகம் பராமரிப்பதே இல்லை. குறிப்பாக நண்பர்கள் நகரில் உள்ள பூங்காவில் குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் குழந்தைகள் விளையாடும் போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் முறையான பராமரிப்பு இல்லாததால் குப்பை கழிவுகள், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் விஷ பூச்சிகள் வசிக்கும் இடமாகமாறி வருவதால் பொதுமக்கள் வந்து செல்லவே அச்சம் அடைந்து உள்ளனர்.
இதனால் பூங்காக்களை பயன்படுத்த தயங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சீரமைத்து பொதுமக்கள் பயன்படுத்த அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதேபோல் சின்னப்பா நகரில் உள்ள பூங்காவும் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.