வேலூர் சத்துவாச்சாரியில் கெங்கையம்மன் கோவிலில் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை
- கோவில் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
- கெங்கை அம்மன் கோவிலில் கொள்ளை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரியில் பழமை வாய்ந்த புகழ் பெற்ற கெங்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் திருவிழா பிரமாண்டமாக நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இந்த நிலையில் நேற்று இரவு பூஜை முடிந்து வழக்கம்போல் கோவிலை பூட்டி சென்று விட்டனர். நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலையில் இருந்து கோவிலுக்குள் மர்ம நபர்கள் ஏறி குதித்துள்ளனர். அங்கு அம்மன் சன்னதியில் உள்ள கிரீல் கதவின் பூட்டை உடைத்தனர். அதற்கு அடுத்து உள்ள மரக் கதவில் பூட்டு இல்லை. அதனால் எளிதாக கதவை திறந்து உள்ளே சென்றனர்.
அம்மன் கழுத்தில் இருந்த தாலி செயின், 4 குண்டு, 2 தங்க பொட்டு உள்பட 3 பவுன் நகைகளை எடுத்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பீரோவில் இருந்த 4 பட்டுப் புடவைகள், வெள்ளி குடை, ஒரு வெள்ளி கிரீடம், வெள்ளி மாலை, வெள்ளி சந்தன கிண்ணம், வெள்ளி தட்டு ஆகியவற்றை கொள்ளையடித்தனர். மேலும் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவு செய்யக்கூடிய ஹார்ட் டிஸ்கை எடுத்துச் சென்று விட்டனர்.
கோவிலில் அம்மன் சன்னதியில் சிரசு ஒன்று உள்ளது. இந்த சிரசின் மேல் வெள்ளி கிரீடம் பொருத்தப்பட்டுள்ளது.கொள்ளையர்கள் வெள்ளி கிரீடத்தினை விட்டு சென்று விட்டனர்.
இன்று காலையில் கோவிலுக்கு வந்த ஊழியர்கள் கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டனர். உடனடியாக கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் மூலம் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கோவிலுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் வேகமாக பரவியது.இதனால் கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
கோவிலில் கைவரிசை காட்டிய கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை எடுத்துச் சென்றதால் அவர்கள் ஏற்கனவே இந்த பகுதியில் அறிமுகமானவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதன் மூலம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கோவில் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. அலுவலக சாலையில் டாக்டர் வீட்டில் கொள்ளை நடந்தது. அலமேலு மங்காபுரம் பகுதியில் பணம் தர மறுத்த நகை அடகு கடை வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு சென்றனர். தொடர்ந்து சத்துவாச்சாரியில் நடைபெறும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தின் அடியில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அருகில் உள்ள கெங்கை அம்மன் கோவிலில் கொள்ளை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற சம்பவத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.