கடலில் வலை விரிப்பதில் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்களிடையே மோதல்- 12 பேர் சிறைப்பிடிப்பு
- புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் இருந்து முத்துகுடா வரையிலும் 32 மீனவ கிராமங்கள் உள்ளன.
- இருதரப்பு மீனவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்தது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் இருந்து முத்துகுடா வரையிலும் 32 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மீன் பிடித்தொழிலுக்காக கடலுக்குள் சென்று வருகின்றன.
அதே போன்று ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லுகின்றன. இந்நிலையில் நாட்டுப்படகு மீனவர்கள் கரை பகுதியிலிருந்து 5 நாட்டிக்கல் வரையிலும், 5 நாட்டிக்கலுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆனால் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கின்ற கரை பகுதியிலிருந்தே விசைப்படகு மீனவர்களும் மீன்பிடிப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவ்வப்போது இருதரப்பு மீனவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
ஏனெனில் விசைப்படகுகளில் அரிவலை போன்ற வலைகளை பயன்படுத்துவதால் மீன் வளர்ச்சிக்கு ஆதாரமான கடல்பாசி, பவளப்பாறைகள் மற்றும் மீன் குஞ்சுகள் அனைத்தும் அரிக்கப்படுவதால் எதிர் காலத்தில் கடலில் மீன் இனமே இருக்காது எனக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள், நாட்டுப்படகு மீனவர்களின் பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த புதுக்குடி பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மீனர்வர்கள், அத்துமீறிய கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்களை தடுத்து நிறுத்தி தட்டிக் கேட்டுள்ளனர்.
அப்போது இருதரப்பு மீனவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து தங்கள் பகுதியிலுள்ள வலைகளை சேதப்படுத்தி மீன்பிடித்ததாகக் கூறி கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 3 விசைப்படகுகள் மற்றும் அதில் சென்ற 12 மீனவர்களையும் புதுக்குடி நாட்டுப் படகு மீனவர்கள் சிறைபிடித்தனர்.
இதற்கிடையில் படகுகளையும் மீனவர்களையும் விடுவிக்க வலியுறுத்தி கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கே சென்ற மீன்வளத்துறையினர், காவல்த்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்கு பிறகு 12 மீனவர்கள் மட்டும் காவல்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்னர். மேலும் சிறை பிடிக்கப்பட்ட விசைப்படகுகள் புதுக்குடி கடல் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடலில் வலை விரித்து மீன்பிடிப்பதில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல் நடைபெற்றுவருவது தொடர்கதையாகி உள்ளது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்பதே இருதரப்பு மீனவர்களின் கோரிக்கையாகும்.