காரில் வந்த 2 பேரை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை- தொடர் சம்பவங்களை தடுக்க கோரி பொதுமக்கள் மறியல்
- செந்தில், சீனிவாசன் ஆகிய 2 பேரை ஆயுதங்களை காட்டி மிரட்டினர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே உள்ளது பூங்கொடி கிராமாம். இந்த ஊரை சேர்ந்த செந்தில், சீனிவாசன் ஆகிய 2 பேர் காரில் பைபாஸ் சாலையில் வந்தனர். புதுக்கோட்டை அருகே அண்டகளூர் பகுதியில் வந்தபோது 2 பெரும் காரை ஓரமாக நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றனர்.
அப்போது சுமார் 8 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்கள் கத்தி, அரிவாள் வைத்திருந்தனர். திடீரென்று அவர்கள் செந்தில், சீனிவாசன் ஆகிய 2 பேரையும் ஆயுதங்களை காட்டி மிரட்டினர். பின்னர் அவர்கள் அணிந்திருந்த செயின்களை பறித்தனர்.
பின்பு சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக அவர்களை அங்கேயே கட்டிப்போட்டு சித்ரவதை செய்ததாக தெரிகிறது. பின்பு அந்த வழிப்பறி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட செந்தில், சீனிவாசன் ஆகிய இருவரும் புதுக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதியில் இதுபோன்று தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுபற்றி தகவல் அறிந்த பூங்கொடி கிராம மக்கள் பைபாஸ் சாலையில் திரண்டனர்.
அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த அவ்ழியாக போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து டி.எஸ்.பி. ராகவி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வேலுசாமி, மருது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அங்கு மறியலில் ஈடுபட்ட மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். வழிப்பறி கும்பலை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு உண்டானது. இதனிடையே கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த செந்தில், சீனிவாசன் ஆகியோர் புதுக்கோட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களிடம் கொள்ளை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொள்ளையர்கள் குறித்து அவர்கள் கொடுத்த அடையாளங்களின் பேரில் கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். இதற்காக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.