ஓ.பி.எஸ்.சின் அடுத்தகட்ட ஆட்டம் இனிமேல்தான் - புகழேந்தி பேட்டி
- ஓ.பன்னீர்செல்வத்தை பா.ஜ.க. தலைவர்கள் முழுமையாக கை கழுவி விட்டார்கள்.
- பண்ருட்டியார் கூறியது போல தமிழக அரசியலில் நிறைய மாற்றங்கள் விரைவில் ஏற்படப்போகிறது.
பெரியகுளம்:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவால் கடந்த 24-ந்தேதி காலமானார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ். இல்லத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மற்றும் புகழேந்தி ஆகியோர் ஓ.பி.எஸ். வீட்டுக்கு வந்து தாயார் பழனியம்மாள் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் புகழேந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
3 முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஒரு தலைவரின் தாயார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாரும் வரவில்லை. இது அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்கட்சியினர் கூட இரங்கல் தெரிவித்து நேரில் அஞ்சலி செலுத்தி சென்றனர். அரசியலில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். இக்கட்சியை வழிநடத்தி மிக உயர்ந்த பொறுப்பில் இருந்த ஒரு தலைவரின் தாயார் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி அவரது துக்கத்தில் பங்கெடுத்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவின் போது ஓ.பன்னீர்செல்வம் இறுதிவரை இருந்து அவரது துக்கத்தில் பங்கெடுத்தார். தற்போதைய நடவடிக்கை ஒரு நிரந்தர பிரிவை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அ.தி.மு.க.வில் பிளவு என்பது உறுதியாகி விட்டது.
ஓ.பன்னீர்செல்வத்தை பா.ஜ.க. தலைவர்கள் முழுமையாக கை கழுவி விட்டார்கள். இனிமேல் அவர்களை நம்பி எந்த பயனும் இல்லை என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. ஒரு காலத்தில் ஸ்தாபன காங்கிரசின் நிலைப்பாடு குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியபோது, முதலில் ஏற்றுக்கொள்ளாத எம்.ஜி.ஆர். பின்னர் உணர்ந்து கொண்டார்.
பண்ருட்டியார் கூறியது போல தமிழக அரசியலில் நிறைய மாற்றங்கள் விரைவில் ஏற்படப்போகிறது. ஓ.பி.எஸ்.சின் அடுத்தகட்ட ஆட்டம் இனிமேல்தான் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.