உள்ளூர் செய்திகள்

தொடரும் மழை: ஆலந்தூர்-வேளச்சேரியில் ஆறுகளாக மாறிய சாலைகள்

Published On 2023-11-04 10:22 GMT   |   Update On 2023-11-04 10:22 GMT
  • கிண்டி ரேஸ்கோர்ஸ் வழியாக செல்லும் 5 பர்லாங் சாலையில் அதிக அளவில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
  • இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளானார்கள்.

சென்னை:

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னையில் நேற்று பகலில் விட்டு விட்டு மழை கொட்டியது. இரவில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது.

வடசென்னை பகுதிகளை விட தென்சென்னை பகுதிகளில் அதிகளவு மழை பதிவாகி உள்ளது. ஆலந்தூர், பெருங்குடி, மீனம்பாக்கம், மடிப்பாக்கம் பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்துள்ளது.

பெரிய அளவில் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆறுபோல் ஓடியது. கிண்டி கத்திப்பாரா அருகில் ஜி.எஸ்.டி. சாலையில் அதிகளவில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் தத்தளித்த படி சென்றன.

பரங்கிமலை-மேடவாக்கம் மெயின் ரோட்டில் மெட்ரோ ரெயில் பணிகளும் நடப்பதால் மழை தண்ணீர் எங்கும் செல்ல முடியாமல் ரோடுகளில் தேங்கி நின்றது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளானார்கள்.

கிண்டி ரேஸ்கோர்ஸ் வழியாக செல்லும் 5 பர்லாங் சாலையில் அதிக அளவில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதற்கு 140 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சுவருடன் அமைந்து உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்துக்குள் தேங்கிய மழை நீரை மோட்டார்கள் மூலம் மழை நீர் கால்வாய்க்குள் வெளியேற்றியதே காரணம் என்று மாநகராட்சி குற்றம் சாட்டி உள்ளது.

இவ்வாறு தண்ணீரை வெளியேற்றி விட மாநகராட்சியில் அனுமதி எதுவும் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

வளசரவாக்கம், நங்கநல்லூர், முகப்பேர், புரசைவாக்கம் டானா தெரு பகுதிகளில் தாழ்வான இடங்களிலும், வேகத்தடை அமைந்துள்ள பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது.

விட்டு விட்டு மழை பெய்வதால் தண்ணீர் வடிந்து விடுகிறது. ஆனால் பெரும்பாலான பகுதிகளில் இந்த சிறு மழைக்கே தாக்கு பிடிக்க முடியாமல் ரோடுகள் சிதைந்து குண்டும் குழியுமாகி விட்டன. ஒரு மாதத்துக்கு முன்பு சீரமைத்த ரோடுகள் கூட சிதைந்து விட்டதாக பொதுமக்கள் ஆதங்கப்பட்டார்கள்.

வேளச்சேரி தண்டீஸ்வரம் ரோட்டில் வழக்கமாக அதிக அளவு தண்ணீர் தேங்கும். ஆனால் இப்போது மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டிருப்பதால் சிறிதளவு தண்ணீர் தேக்கம் இருந்தது. அதுவும் சிறிது நேரத்தில் வடிந்து விட்டது.

மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

பேரிடர் மேலாண்மை துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து தண்ணீர் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் கடந்த ஆண்டுகளை விட தண்ணீர் தேக்கம் பெருமளவு குறைந்து விட்டது. வேளச்சேரி மெயின்ரோடு, ஏ.ஜி.எஸ். காலனி 4 மற்றும் 5வது தெரு ஆகிய பகுதிகள் அதிக அளவு தண்ணீர் தேங்கும் பகுதிகளாக இருந்தன. அந்த நிலை இல்லை என்றார்.

Tags:    

Similar News