உள்ளூர் செய்திகள் (District)

குன்னூரில் பலத்த மழை: மலைப்பாதையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-11-01 10:01 GMT   |   Update On 2023-11-01 10:01 GMT
  • மழைக்கு குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கே.என்.ஆர் அருகே சாலையோரம் நின்றிருந்த காய்ந்த மரம் ஒன்று முறிந்து சாலையின் நடுவே விழுந்தது.
  • குன்னூர் மட்டுமின்றி மாவட்டத்தின் பிற பகுதிகளான ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

அருவங்காடு:

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக ஒரு சில இடங்களில் மரங்கள் விழுந்து வருகிறது. இதனை தீயணைப்பு துறையினர் சீரமைக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றும் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

இந்த மழைக்கு குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கே.என்.ஆர் அருகே சாலையோரம் நின்றிருந்த காய்ந்த மரம் ஒன்று முறிந்து சாலையின் நடுவே விழுந்தது.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் ஜே.சி.பி. உதவியுடன் மரக்கிளைகளை வெட்டி சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.

மேலும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் மலைப்பாதையில் உள்ள மண் திட்டுக்கள் மற்றும் அபாயகரமாக உள்ள மரங்கள் எந்த நேரத்திலும் சரிந்து கீழே விழும் அபாயம் உள்ளதால், வாகன ஓட்டிகள் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றும் பாதுகாப்பான இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

அத்துடன் வாகனங்களை மலைப்பாதையில் கவனமாக இயக்கி செல்லவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

குன்னூர் மட்டுமின்றி மாவட்டத்தின் பிற பகுதிகளான ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

கோவை மாவட்டத்திலும் மழை பெய்தது. மாநகர் பகுதிகளில் இரவில் கனமழை கொட்டியது. திடீர் மழையால் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற பலரும் மழையில் நனைந்த படியே சென்றனர்.

சிலர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

திடீர் மழையால் சாலைகளில் திடீர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

இந்த மழையால் கோவையில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான காலநிலை நிலவியது.

Tags:    

Similar News