உள்ளூர் செய்திகள் (District)
நெல்லையில் இன்று காலை பெய்த மழையால் குடை பிடித்து சென்ற மாணவ-மாணவிகள், பெண்கள்.

நெல்லையில் 'திடீர்' சாரல் மழை

Published On 2023-02-28 04:47 GMT   |   Update On 2023-02-28 04:47 GMT
  • மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள் திடீர் மழையால் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு ஒதுங்கி நின்றனர்.
  • கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்து வந்த வெயிலில் இருந்து தப்பித்ததாக பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

நெல்லை:

தென்கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று நெல்லை மாவட்டத்தில் திடீரென சாரல் மழை பரவலாக பெய்தது.

நெல்லையில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. காலை நேரங்களில் கடுமையான பனியும், பகலில் வெயிலும் இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குறிப்பாக மாநகர பகுதியில் காலையில் திடீர் சாரல் மழை பெய்ய தொடங்கியது. பேட்டை, டவுன், சந்திப்பு, பாளை முருகன்குறிச்சி, சமாதானபுரம், கே.டி.சி.நகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இந்த திடீர் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள், பணிக்கு சென்ற பெண்கள் ஆகியோர் குடைபிடித்தப்படி சாலையில் நடந்து சென்றதை காணமுடிந்தது. ஒருசில இடங்களில் சற்று கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஓடியது.

மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள் திடீர் மழையால் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு ஒதுங்கி நின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்து வந்த வெயிலில் இருந்து தப்பித்ததாக பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

அதேநேரத்தில் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் தற்போது நெல் அறுவடை பணிகள் நடந்து வருகின்றது. அங்கு திடீரென சாரல் மழை பெய்ததால் விவசாயிகள் சற்று கலக்கம் அடைந்தனர்.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் சுற்று வட்டார கிராமங்களில் காலை 6 மணி முதல் 1 மணி நேரம் பரவலாக மழை பெய்தது.

Tags:    

Similar News