ரேசன் கடை ஊழியர்கள் போராட்டம் தீவிரம்: சென்னையிலும் 13-ந்தேதி ரேசன் கடைகள் மூடப்படுகிறது
- சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் 13-ந்தேதி முதல் ரேசன் ஊழியர்கள் கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
- போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள ரேசன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று அரசு அறிவித்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் விவரங்களை பட்டியல் எடுத்து வருகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் ரேசன் கடை ஊழியர்களின் போராட்டம் மேலும் தீவிரம் அடைகிறது. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை மீண்டும் வழங்க கோரி வருகிற திங்கட்கிழமை முதல் (13-ந்தேதி) சென்னையிலும் ரேசன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் குதிக்கின்றனர்.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி 1-ந்தேதி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் ரேசன்கடை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.
இதனை கண்டித்து ரேசன் கடை ஊழியர்கள் நேற்று முதல் கடைகளை திறக்காமல் 'ஸ்டிரைக்' செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை தவிர்த்து 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ரேசன் கடை ஊழியர்கள் 'ஸ்டிரைக்' செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 33 ஆயிரம் ரேசன் கடைகளில் அமுதம், சிந்தாமணி, காமதேனு மற்றும் சுய உதவி குழு நடத்தும் கடைகளை தவிர்த்து 25 ஆயிரம் ரேசன் கடைகளில் உள்ள ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு உள்ளனர்.
தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம், கடலூர், தேனி, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ரேசன் கடை திறக்கப்படாததால் மக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:-
ரேசன்கடை ஊழியர்கள் புதிதாக எந்த கோரிக்கையையும் வைத்து போராடவில்லை. அரசு அறிவித்த நிறுத்தி வைத்துள்ள உத்தரவை செயல்படுத்துமாறு தான் கேட்கிறார்கள்.
கருணாநிதி ஆட்சியின் போது 2010-ல் அகவிலைப்படி 6 மாதத்துக்கு ஒருமுறை வழங்கப்பட்டது. அதை நிறுத்தி விட்டனர்.
10 வருடம் பணி முடித்தால் தேர்வு நிலை, 20 வருடம் பணி முடிந்தால் சிறப்பு நிலை ஊதியம் வழங்கப்பட வேண்டும். 4.3.2020 அரசாணையில் அறிவித்தப்படி அதுவும் வழங்கப்படவில்லை.
5 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய மாற்றம் செய்ய வேண்டும். அரசாணை எண்.24ன்படி 22.2.2021ல் அறிவித்தபடி புதிய ஊதிய உயர்வை மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக வழங்க ஏதுவாக மாதிரி பட்டியலை வெளியிட்டு ஒரு மாதிரியாக ஊதியம் வழங்க வேண்டும். இதுவும் எல்லா பணியாளர்களுக்கும் அமல்படுத்தப்படவில்லை.
கொரோனா காலத்திலும், பொங்கல் சிறப்பு தொகுப்பு கொடுக்கும் போதும் ஒரு கார்டுக்கு 50 பைசா வீதம் பணியாளர்களுக்கு தருவதாக சொன்னார்கள். அதையும் வழங்கவில்லை.
இந்த அறிவிப்பு அனைத்தும் அரசால் அறிவிக்கப்பட்டு அரசாணை போடப்பட்டது. ஆனால் இன்னும் செயல்படுத்தாமல் இருக்கிறார்கள். இதைதான் நாங்கள் கேட்கிறோம்.
பொது வினியோக திட்டத்திற்காக தனித்துறையை உருவாக்க வேண்டும் என்று பல ஆண்டாக வலியுறுத்தி வருகிறோம்.
5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியையும் சேர்த்து அரசு பணியாளர்களுக்கு வழங்கக் கூடிய 31 சதவீத அகவிலைப்படி ரேசன் கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். அதுவும் இன்னும் வழங்கவில்லை.
அது மட்டுமல்ல சரியான எடையில் தரமான பொருட்களை (அரிசி உள்பட) பொட்டலமாக வழங்க வேண்டும். அனைத்து ரேசன் கடைகளுக்கும் புதிய 4ஜி விற்பனை முனையம், 4ஜி சிம் வழங்க வேண்டும். மோடம் வழங்கப்பட்டு இணைய தள சேவை மேம்படுத்த வேண்டும், பழுதடைந்த விற்பனை முனையத்திற்கு பழுது நீக்கம் தொகை வசூல் செய்வதை கைவிட வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் இருப்பு அதிகமாக இருந்தால் பல மடங்கு அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும் என்பன போன்ற 11 அம்ச கோரிக்கையை நிறைவேற்றக்கோரி போராடுகிறோம்.
இந்த அரசு போராட்டத்தை மதிக்கும் அரசு என்பதால், எங்களது போராட்டத்துக்கு மதிப்பு கொடுத்து கோரிக்கையை நிறைவேற்றும் என நம்பு கிறோம்.
இவ்வாறு கு.பாலசுப்பிரமணியன் கூறினார்.
இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள ரேசன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று அரசு அறிவித்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் விவரங்களை பட்டியல் எடுத்து வருகிறது.
இந்த நிலையில் வருகிற 13-ந்தேதி முதல் ரேசன் கடை ஊழியர்களின் போராட்டம் தீவிரம் அடைகிறது.
இது பற்றி தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் தினேஷ்குமார் (தொழிலாளர் நலத்துறையில் பதிவு பெற்ற சங்கம்) கூறியதாவது:-
ரேசன்கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்காமல் இருப்பதால்தான் நாங்கள் போராட்டத்தில் குதிக்கிறோம். வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் எங்களது சங்கமும், அண்ணா பணியாளர்கள் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு அனைத்து பணியாளர் சங்கமும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
எனவே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் 13-ந்தேதி முதல் ரேசன் ஊழியர்கள் கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
வடசென்னையில் 878 ரேசன்கடை, தென் சென்னையில் 888 கடை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 635, செங்கல்பட்டு மாவட்டத்தில் 841, திருவள்ளூர் மாவட்டத்தில் 1117 ரேசன் கடைகள் உள்ளன.
இந்த கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு தினேஷ்குமார் கூறினார்.