உடுமலை அமராவதி அணையில் சரியும் நீர்மட்டம்
- பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
- மழை பெய்யாததால் அணை நீர்மட்டம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 55 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
நூற்றுக்கணக்கான கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. தென்மேற்கு பருவ மழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையும் வடகிழக்கு பருவ மழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் அமராவதி அணைக்கு நீர் வரத்து இருக்கும்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை முடியும் தருவாயில், டிசம்பர் மாதம் இறுதியில் எதிர்பாராத விதமாக கனமழை கொட்டியது . வினாடிக்கு 10 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக நீர்வரத்து இருந்ததால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவையும் எட்டியது. இதனால் உபரி நீர் திறந்து விடப்பட்டது.
தற்போது பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் மழை பெய்யாததால் அணை நீர்மட்டம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அணையில் கடந்த 30-ந் தேதி நீர்மட்டம் 86 அடியாக இருந்த நிலையில் இன்று நீர்மட்டம் 82.52 அடியாக குறைந்துள்ளது.