காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் குடியரசு தின விழா
- மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
- நகராட்சி ஆணையர் சுபாஷினி உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கில் 75-வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீசார், ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை, நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து கலெக்டர் கலைச்செல்வி மோகன் மூவர்ண பலூன்களை பறக்க விட்டு சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களை வழங்கினார். பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கும், 25- ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கும் நற்சான்றிதழ்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து இந்திய திருநாட்டின் விடுதலைக்காக மேலும் சுதந்திரப் போராட்ட தியாகிகளின், மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு கலெக்டர் கலைச்செல்வி மோகன் கதர் ஆடை அணிவித்து கவுரவித்தார். பின்னர் 23 பயனாளிகளுக்கு ரூ. 5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. பொன்னி, போலீஸ்சூப்பிரண்டு சண்முகம், காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ. வக்கீல் எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், வருவாய் கோட்டாட்சியர் திவ்யா, முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் ராமச்சந்திர பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தார். மேலும், மாவட்ட தொழில் மையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையர் நலத்துறை, வேளாண்மை உழவர் பாதுகாப்புத் நலத்துறை, முன்னாள் படைவீரர் நலத் துறை, தாட்கோ ஆகியவற்றின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் 25 பேருக்கு ரூ. 27 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை 24 போலீசாருக்கும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 579 அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிநடைபெற்றது.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பரண்டு சீபாஸ் கல்யாண், வருவாய் அலுவலர் ராஜ்குமார், ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் சுகபுத்திரா, கூடுதல் போலீஸ் சூப்பரண்டு ஹரிகுமார், மீனாட்சி, திருவள்ளூர் துணை சூப்பரண்டு அனுமந்தன், நகராட்சி ஆணையர் சுபாஷினி உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு அடுத்த வெண்பாக்கம் பகுதியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு நன்னடைத்தை சான்றிதழ்களை கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார். பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாய் பிரனீத், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.