சாலிகிராமத்தில் கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளையடித்த ஊழியர் கைது
- உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தினேஷ் வீட்டை பூட்டி விட்டு சாவியை ஜன்னல் ஓரமாக வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
- கர்ணனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து நகை-பணத்தை பறிமுதல் செய்தனர்.
போரூர்:
சென்னை சாலிகிராமம், செங்கராஜுலு தெருவை சேர்ந்தவர் தினேஷ். இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவரது கடையில் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த கர்ணன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். தினேஷ் நேற்று காலை மனைவி இந்திராகாந்தியுடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சாவியை ஜன்னல் ஓரமாக வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
பின்னர் மாலையில் வீடு திரும்பிய தினேஷ் வீட்டை திறந்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த 10 பவுன் நகை, வைர நெக்லஸ் மற்றும் ரூ.28ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போயிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக அவர் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
உதவி கமிஷனர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது தினேஷ் வெளியே சென்றதை நோட்டமிட்ட அவரது பேக்கரி கடை ஊழியர் கர்ணன் பூட்டை திறந்து நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து கர்ணனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து நகை-பணத்தை பறிமுதல் செய்தனர்.