உள்ளூர் செய்திகள் (District)

ரேசன் அரிசி கடத்தல் கும்பலிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட தனிப்பிரிவு ஏட்டு சஸ்பெண்டு

Published On 2022-08-13 04:08 GMT   |   Update On 2022-08-13 04:08 GMT
  • பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவிக்க ரேசன் கடத்தலில் ஈடுபட்ட ஒரு பெண் ஆசனூர் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஜெகநாதன் என்பரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
  • போலீஸ் ஏட்டு ஜெகநாதன் அந்த பெண்ணிடம் ரேசன் அரிசி கடத்திய ஆட்டோவை விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், ஆசனூர் ஆகிய பகுதிகள் தமிழக கர்நாடக எல்லை பகுதியில் அமைந்து உள்ளது. இந்த பகுதிகளில் இருந்து சிலர் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அருகில் உள்ள கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு கடத்தி சென்று கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.

போலீஸ் சோதனையை மீறியும் ரேசன் அரிசி கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஒரு ஆட்டோவில் ஒரு கும்பல் ரேசன் அரிசியை கடத்தியது. இந்த ஆட்டோவை ஆசனூர் போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவிக்க ரேசன் கடத்தலில் ஈடுபட்ட ஒரு பெண் ஆசனூர் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஜெகநாதன் என்பரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது போலீஸ் ஏட்டு ஜெகநாதன் அந்த பெண்ணிடம் ரேசன் அரிசி கடத்திய ஆட்டோவை விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

இதை ரேசன் அரிசி கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார். தொடர்ந்து போலீஸ் ஏட்டு ஜெகநாதன் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியானது. போலீசார் மத்தியில் இது பரபரப்பாக பேசப்பட்டது.

இது பற்றி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சத்தியமங்கலம் டி.எஸ்.பி. சந்திரசேகர், தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வன் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ரேசன் அரிசி கடத்தல் கும்பலிடம் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஜெகநாதன் லஞ்சம் கேட்டது உறுதியானது. இது குறித்து அவர்கள் போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிக்கையாக கொடுத்தனர்.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், ஆசனூர் தனிப்பிரிவு ஏட்டு ஜெகநாதனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News