உள்ளூர் செய்திகள் (District)

நங்கவள்ளி வார சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

Published On 2024-10-27 09:40 GMT   |   Update On 2024-10-27 09:40 GMT
  • வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கிச்சென்றனர்.
  • சந்தைக்கு கொண்டுவரப்பட்ட ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேட்டூர்:

சேலம் மாவட்டம் நங்கவள்ளி வாரசந்தையில் இன்று ஞாயிற்றுகிழமையை முன்னிட்டு ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சந்தையில் இன்று காலை 6 மணிக்கு மேச்சேரி, மேட்டூர், நங்கவள்ளி, தாரமங்கலம், ஓமலூர், காடையாம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதுபோல் நாட்டு இன கோழிகள் அதிக எண்ணிக்கையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. 10 கிலோ ஆட்டு கிடாய் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

தீபாவளி பண்டிகைக்காக ஆடுகளை வாங்க ஏராளமானோர் குவிந்ததால் ஆடுகள் விலை 3 ஆயிரம் ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து விற்பனையானது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கிச்சென்றனர். இன்று ஒரே நாளில் ஆடுகள், கோழிகள், மாடுகள் வியாபாரம் ரூ.2 கோடிக்கு மேல் நடைபெற்றதாக சந்தை பராமரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

சந்தைக்கு கொண்டுவரப்பட்ட ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் ஆடு வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. ஆடு வளர்ப்பு என்றாலே பெரும்பான்மையானோருக்கு நினைவுக்கு வருவது வெள்ளாடுகள்தான். ஆனால், வெள்ளாடுகளுக்கு நிகராக செம்மறியாடுகள் வளர்ப்புக்கு மிகவும் ஏற்றவையாக உள்ளது. இதனால் பெரும்பாலோனார் மேச்சேரி செம்மறியாடுகளை தேர்வு செய்கிறார்கள். இதனால் செம்மறி ஆடுகள் விற்பனை இன்று அமோகமாக இருந்தது என்றனர்.

Tags:    

Similar News