உள்ளூர் செய்திகள்

விருகம்பாக்கத்தில் வாடகைக்கு எடுத்த லேப்டாப்களை விற்று ரூ.80 லட்சம் மோசடி: வாலிபர் கைது

Published On 2023-11-18 09:27 GMT   |   Update On 2023-11-18 09:27 GMT
  • வாடகைக்கு எடுத்து சென்ற 521 “லேப்டாப்” களையும் தினேஷ் வேறு ஒரு நிறுவனத்திடம் ரூ.80 லட்சத்துக்கு விற்று மோசடியில் ஈடுபட்டது தெரிந்து பிரேமலதா அதிர்ச்சி அடைந்தார்.
  • நேரில் சென்று கேட்டபோது தகாத வார்த்தைகளால் பேசிய தினேஷ், பிரேமலதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

போரூர்:

சென்னை நொளம்பூர், பகுதியை சேர்ந்தவர் பிரேமலதா. இவர் விருகம்பாக்கம் பகுதியில் லேப்டாப், கம்ப்யூட்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை மாத வாடகைக்கு கொடுத்து வரும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இவருக்கு பம்மல் சங்கர் நகரை சேர்ந்த டிப்ளமோ பட்டதாரி தினேஷ் லிங்கம் (27) என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமானார். மேலும் மாத வாடகைக்கு "லேப்டாப்"களை எடுத்து சென்று முறையாக வாடகையும் செலுத்தி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ3.5 கோடி மதிப்புள்ள 521 "லேப்டாப்"களை தினேஷ் மாத வாடகைக்கு எடுத்து சென்றார். ஆனால் நீண்ட நாட்களாகியும் அவர் "லேப்டாப்"களை திரும்ப ஒப்படைக்கவில்லை. அவரது செல்போனும் "சுவிட்ச் ஆப்" செய்யப்பட்டு இருந்தது.

இதற்கிடையில் தன்னிடம் வாடகைக்கு எடுத்து சென்ற 521 "லேப்டாப்" களையும் தினேஷ் வேறு ஒரு நிறுவனத்திடம் ரூ.80 லட்சத்துக்கு விற்று மோசடியில் ஈடுபட்டது தெரிந்து பிரேமலதா அதிர்ச்சி அடைந்தார்.

இது பற்றி நேரில் சென்று கேட்டபோது தகாத வார்த்தைகளால் பேசிய தினேஷ், பிரேமலதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து பிரேமலதா விருகம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். உதவி கமிஷனர் சுப்பிரமணியன் தலைமையிலான தனிப்படை போலீசார் தினேஷ் லிங்கத்தை கைது செய்தனர். அவர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி, ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News